ஓடிடி தளங்கள் மீதான ஆதங்கம் பற்றியும், சின்ன பட்ஜெட் படங்கள் திரைக்கு வர முடியாமல் தவிப்பது பற்றியும் இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் சிறு குறிப்பாக எழுதியிருந்தார். அவரிடம் இது பற்றியும் சற்று விரிவாகப் பேசினோம்.
வசந்த பாலன், “பொதுவாக கோவிட்க்குப் பிறகு சின்ன பட்ஜெட் படங்களுக்கான திரையரங்குகள் கிடைப்பதில்லை. எல்லா தியேட்டர்களிலும் பெரிய படத்தை வெளியிடும் போக்கு ஆரம்பித்துவிட்டது.
அதனால் சின்ன படங்களுக்கான இடம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்து வருகிறது. முன்பு தீபாவளி அல்லது ஒரு வெள்ளிக்கிழமை என்றால் நான்கு அல்லது ஆறு படங்கள் கூட ரிலீஸ் ஆகியிருக்கின்றன.

அது குறைந்து குறைந்து இரண்டு படம், ஒரு படம் ரிலீஸ் ஆனால் போதும் என்கிற நிலைமை வந்துவிட்டது. அதனால் சிறு படங்களுக்கான தேவையை குறைக்க ஆரம்பித்துவிட்டது.
என்னுடைய படங்கள் ‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ’96’, ‘ஆட்டோகிராப்’ போன்றவை எல்லாம் விமர்சனம் வந்த இரண்டாவது வாரத் தொடக்கத்தில் தான் பிக்அப் ஆகும் சூழல் இருந்தது. இப்போது இரண்டாவது வாரம் என்ற நிலைமையே ஒரு படத்திற்கு இல்லாமல் இருக்கிறது.
இப்போது தேவையான திரையரங்குகள் கிடைக்கவில்லை. அப்படி கொஞ்சம் கிடைத்தாலும் தேவையான ஷோ கிடைக்காத நிலைமை இருக்கிறது. எல்லாம் சேர்ந்து நீங்கள் இந்தப் படத்தைத் தான் பார்க்க வேண்டும் என்கிற ஒரு அழுத்தத்தை பார்வையாளருக்கு உருவாக்குகிறார்கள்.
வருத்தமளிக்கிறது
எல்லா தியேட்டர்களிலும் ஒரே படம் ஓடுவதால் அந்தப் படத்தைத் தான் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் எழுகிறது. சின்னப் படங்களுக்கான இடம் கிடைக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
நாங்கள் எல்லாம் அப்படித்தான் வளர்ந்து வந்தவர்கள். லாக்டவுன் வந்தபோது ஓடிடி தளங்கள் சின்ன படங்களை வாங்க ஆரம்பித்தன.
பெரிய படங்களையும் வாங்கியது. எல்லோரும் ஓடிடி தளம் என்பது சின்னப் படங்களுக்கான தளமாக மாறுகிறது என்று சந்தோஷப்பட்டார்கள்.

சொல்ல விரும்பும் பெரிய கதைகளை ஓடிடியில் சொல்ல முடியும் என்று அதிலிருந்து எதிர்பார்த்தோம்.
ஆனால் மறுபடியும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும், பெரிய நடிகர்களும், பெரிய இயக்குநர்களும் போய் முழுவதுமாக அது அவர்களின் வசமாகிவிட்டது.
சிறு படங்களை வாங்க வைப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது. அவர்களை படம் பார்க்க வைப்பதற்கு ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. என்னுடைய ‘அநீதி’ படத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்று அறியவே ஒரு வருடம் ஆகிவிட்டது.
சின்ன படத்தின் மூலம் வந்த இயக்குநர்கள், நடிகர்கள்தான் காலப்போக்கில் பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்களாக மாறுகிறார்கள்.
பெரிய படங்கள் வாங்குவதால் மட்டுமே அவர்களுக்கு பெரிய ஆதாயம் என்று வைத்துக் கொண்டாலும், அந்த படங்களை 75% சின்ன படங்களை 25% ஆக கூட அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
அதனால் எங்களுக்கான ஒரு ஜன்னல் திறக்கப்பட்டு சிறு காற்றாவது எங்கள் மீது படும். ஒரு நிறுவனம் எல்லோரையும் அரவணைத்து கை கோர்த்துதான் வளர வேண்டுமே தவிர ஒருத்தரை மட்டும் கைதூக்கி விட்டு மற்றவர்களை நசுக்கக் கூடாது.

பெரிய படங்களைக் கூட பறந்து பறந்து சண்டையிடுகிறார்களா, பேய் இருக்கா, சாமி படமாக இருக்கிறதா, அதிக வன்முறை உள்ளதா, ரத்தம் உங்கள் மீது தெறிக்கிற அளவு இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்குகிறார்கள்.
இப்போது வருகிற அநேக தமிழ் படங்களில் இது மாதிரி வன்முறைகள் பெருகிவிட்டன. இதனால் சிறுவர்களை பெரிதும் பாதிக்கிற நிலை வந்துவிட்டது. தமிழ்நாட்டில் இருப்பதே 1450 தியேட்டர்கள்தான்.
ஒரு பெரிய நடிகர் படம் வந்தால் 900 தியேட்டர்களிலாவது அவர் படத்தைப் போட்டு விடுகிறார்கள். சின்னப் படங்கள் ஓடுவதற்கான ஒரு சுவாசம் கூட கிடைக்கவில்லை. நம் படங்களை இவர்களிடம் காட்டும்போது ‘இதெல்லாம் ஓடாது. திரையரங்குகள் கிடைக்காது.
ஷோ கேன்சல் ஆகிவிடும்’ என்று கருணையில்லாமல் சொல்லிவிடுகிறார்கள். நல்ல சினிமா என்பது தமிழ் சினிமாவின் ஆரோக்கியம் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இப்போது ஒரு ஓடிடி நிறுவனம் தாங்கள் வாங்கிய படங்களை சொல்லியிருக்கிறார்கள். எல்லாமே பெரிய படங்கள். அல்லது பெரிய கம்பெனி தயாரித்த படங்கள். இங்கே யானைகள்தான் வாழ முடியும்.
எறும்பு வாழ முடியாது என்கிற நிலைமை உருவாகிவிட்டது. நல்ல இயக்குநர்கள் சிறு படங்களை நோக்கி இப்படி ஒரு கண்டுகொள்ளாத தன்மையை உருவாக்குகிறார்கள்.

நான் சின்ன படங்களுக்கு ஒரு 25 சதவீத இடமாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவ்வளவு கடினமான ஒரு வேளையில் படம் எடுப்பதே பெரிய பிரச்சினையாகிவிட்டது.
நான் என் படத்தை எடுத்து ஒன்றரை வருடம் என் கையில் வைத்திருந்தேன். பெரிய நிறுவனம், பெரிய படம், பெரிய ஹீரோ தவிர மற்றவர்களை ‘கெட் அவுட்’ என்று சொல்லி விடாமல் அடுத்தடுத்து பல விஷயங்கள் நடக்கின்றன.
டிக்கெட் விலையும் குறைவதில்லை. இன்னிக்கு இளைஞர்கள் பட்டாக்கத்தியோடு ரிலீஸ் போடுகிறார்கள். ஒரு சமூக இயக்குநராக இதெல்லாம் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.” என்றார் வருத்தத்துடன்.