இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை இருக்கும். அந்த வகையில் தோனியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜடேஜா இந்திய அணியின் அனைத்து பார்மெட்டுகளிலும் முக்கியமான வீரராக இருந்தார். 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவித்த ஜடேஜா, தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு அவர் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவரை அவரின் இடம் இந்திய அணியில் நிரந்தரமாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.
Add Zee News as a Preferred Source

நியூசிலாந்து தொடர்
சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்தது. கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த தோல்விக்கு பலரும் காரணம் என்றாலும், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடுகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அவருக்கு மாறாக அக்சர் படேல் அணிக்குள் வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் அக்சர் படேல் விளையாடி இருந்தார். ஆனால் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடரில் அவர் இடம் பெறவில்லை. இந்நிலையில் ஜடேஜாவின் இடம் ஒரு நாள் அணியில் கேள்விக்குறியாகி உள்ளது.
சொதப்பிய ஜடேஜா
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஜடேஜா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எதிலுமே சிறப்பாக செயல்படவில்லை. இந்த மூன்று போட்டிகளில் ஒரு விக்கெட் கூட ஜடேஜா எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டிங்கில் 3 இன்னிங்ஸில் மொத்தமாக 43 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார், அதிகபட்சமாக 27 ரன்கள் அடித்துள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி கட்டத்தில் அடித்து ஆட ஒரு பேட்டர் இல்லாமல் போனது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அது தற்போது ஜடேஜாவின் பக்கம் திருப்பி உள்ளது.

அஸ்வின் சொன்ன கருத்து
ஜடேஜாவின் பெர்ஃபார்மன்ஸ் குறித்து தனது youtube சேனலில் பேசிய அஸ்வின், ஜடேஜாவிற்கு இது மிக சோதனையான காலம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வின் பேசுகையில், “ஜடேஜாவிற்கு இது ஒரு சவாலான நேரம். அக்சர் படேல் போன்ற வீரர்கள் இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜடேஜா சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்த ஒரு நாள் தொடரில் அவருடைய பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே பெரிதாக எடுபடவில்லை. ஜடேஜாவின் எதிர்காலத்தைப் பற்றி தற்போது அனைவரும் பேச தொடங்கியுள்ளனர்.
அடுத்து டி20 உலக கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜடேஜாவின் செயல்பாடு குறித்து அவரது எதிர்காலம் முடிவு செய்யப்படும். அவர் ஒரு லெஜன்ட், ஆனால் மாற்றங்கள் தேவை. ஜடேஜாவின் திறமையை பார்த்து நான் பலமுறை வியந்துள்ளேன், பொறாமை பட்டுள்ளேன். ஆனால் அவர் தனது பலத்தை மீறி புதிதாக எதுவும் செய்ய மாட்டார். பயிற்சியின் போது பல்வேறு விதங்களில் பந்துகளை வீசுவார். ஆனால் போட்டியில் அதை எதுவும் செயல்படுத்த மாட்டார். அவருடைய ஆட்டத்தில் அவர் புதுமையை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஜடேஜா vs அக்சர்
38 வயதான ஜடேஜா, 17 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை 210 ஒருநாள் போட்டிகளில் 2905 ரன்களும், 232 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம், 32 வயதான அக்சர் பட்டேல் 71 ஒருநாள் போட்டிகளில் 858 ரன்களும், 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை ஜடேஜா அணியில் நீடிப்பாரா அல்லது அக்சர் பட்டேல் அந்த இடத்தை பிடிப்பாரா என்பது வரும் ஐபிஎல் மற்றும் அடுத்தடுத்த தொடர்களில் தெரிய வரும்.
About the Author
RK Spark