“எழுத்துக்கள், சமத்துவ சமூகத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும்" – எழுத்தாளர் புனித ஜோதி

49 ஆவது சென்னை புத்தகக் காட்சி வாசகர்களின் அமோக வரவேற்புடன் தற்போது நடைபெற்று வருகிறது.

நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியமாக புத்தக வெளியீடுகளும், புத்தக விற்பனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இல்லத்தரசியாக இருந்து சிறு கவிதைகளின் வாயிலாக கவிஞராகவும், “கெங்கம்மா” நாவலின் மூலம் எழுத்தாளராக அடையாளம் பெற்றிருக்கிறார் புனித ஜோதி.

அவரிடம் பேசுகையில், “ எனது ஊர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி. கிராமம் என்றாலே பெண்களை வீட்டில் பூட்டி வைக்கும் பழக்கம் தான் இருக்கிறது. எங்கள் திறமைகளை கூட எங்களால் வெளிக்கொண்டுவர முடியாது. அப்படி வீட்டில் இருக்கும் போது வாசிப்பு பழக்கத்தின் மூலம் கவிதை எழுதும் திறன் உருவானது.

என்னோடு கூட பிறந்த சகோதரிகள் மூன்று பேர் சேர்ந்து அண்ணன் திருமணத்தில் எங்கள் கவிதைகளை தொகுத்து “நான்கு புள்ளிகளும் 40 கோலங்களும்”என்ற தலைப்பில் புத்தகமாக எங்கள் அண்ணனுக்கு பரிசு வழங்கினோம். அதுவே என்னுடைய எழுத்து உலகில் முதல் அடி எனலாம். எழுத்தின் மீது ஆர்வம் கொண்டிருப்பதை கண்ட எனது கணவர் எனக்கு மேலும் உற்சாகப்படுத்தினார், ஊக்குவித்தார். பிறகு சென்னைக்கு எனது கணவர் பணி மாறுதல் காரணமாக வந்த போது “கவிதை உறவு” என்ற அமைப்பில் இணைந்தேன்.

கொரோனா காலகட்டம் என் எழுத்து உலக பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது எனலாம். கணையாழி, காலச்சுவடு இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளேன். அதுமட்டுமில்லாமல், ஆனந்த விகடன் சொல்வனம் பகுதியிலும், எனது கவிதை வெளியாகி இருக்கிறது.

இதழ்களில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத்தாளரும், கல்கி ஆசிரியருமான அமிர்தம் சூர்யா அவர்கள் தான் எனக்கு உற்சாகத்தை தந்து பதிவிட்ட கவிதைகளை புத்தகமாக வெளியிட ஊக்குவித்தார். அதன் வெளியீடு தான் “நிழல்களின் இதயம்”, “மௌனக்கூத்து” ஆகிய கவிதை புத்தகங்களாக வெளிவந்தன. பிறகு அமெரிக்கா சென்றபோது எனது ஊரின் தலைப்பில் “வைகை கண்ட நயாகரா” என்ற தலைப்பில் பயண புத்தகத்தை வெளியிட்டேன்.

எதைப் பற்றியது கெங்கம்மா?

நான் எழுதிய முதல் நாவலான கெங்கம்மா, ஆண்டிப்பட்டி அருகே வாழும் தமிழ்நாட்டின் பழங்குடிகளான தொம்பர் இன பழங்குடி மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் கெங்கம்மா எப்படி தனது சமூகத்தினரை மீட்டெடுக்கிறாள் என்பதுதான் இதன் கரு. அடுத்த நாவலும் தயாராகிக் கொண்டிருக்கிறது அதை நீங்கள் இன்னும் சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

என்னை மாற்றிய எழுத்துக்கள்..!

என்னைப் பற்றி எனது குடும்பத்திற்கும் எனது புகுந்த குடும்பத்திற்குமே பெரிய அளவில் தெரியாது. அவர்களை பொறுத்தவரையில் நான் ஒரு குடும்பப் பெண், இல்லத்தரசி அவ்வளவுதான். என்னை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டுவந்தது இந்த எழுத்து உலகம் தான். சென்னை மாநகரம் என்னை செதுக்கி இருக்கிறது என்றும் கூறலாம். முற்போக்கு சிந்தனையின் மீது பெரியார் அம்பேத்கர் குறிப்பாக மார்க்ஸியத்தின் மீது எனக்கு அளவு கடந்த ஈடுபாடு உள்ளது.

எனது எழுத்துக்கள் சமூகத்தை சமத்துவ பாதையை நோக்கி நடை போட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.