Chennai Super Kings : ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே பல சர்பிரைஸ் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய சொந்த மைதானத்தையே மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் அதிர்ச்சியாக இருந்தாலும், தோனி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியும் கூடவே வெளியாகியுள்ளது. ஏனென்றால், சேப்பாக்கம் மைதானத்துக்கு மாற்றாக சில மைதானங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிசீலித்து வருகிறது. அதில் தோனியின் சொந்த மைதானமான ராஞ்சியும் இருக்கிறது. அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏன் சேப்பாக்கம் மைதானத்தை மாற்றுகிறது என்பது உள்ளிட்ட பின்னணி தகவல்களை பார்க்கலாம்.
Add Zee News as a Preferred Source
சேப்பாக்கம் மைதானம் மாற்றம் ஏன்?
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரும் அதே காலக்கட்டத்தில் நடைபெறுவதால், ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது சவாலான காரியம். இதன் காரணமாகவே, சிஎஸ்கே அணியின் ஹோம் மேட்சுகளை வெளிமாநிலங்களுக்கு மாற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பிசிசிஐயும் திட்டமிட்டுள்ளன.
தோனியின் ராஞ்சியில் மேட்ச்
(@UpdatesChennai) January 21, 2026
சென்னை ரசிகர்களுக்கு இது வருத்தமான செய்தியாக இருந்தாலும், ஜார்கண்ட் மாநில ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சிஎஸ்கே-வின் மாற்று மைதானமாக எம்.எஸ்.தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ (JSCA) மைதானம் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 2014ஆம் ஆண்டும் இதேபோல சில நிர்வாகக் காரணங்களால் சிஎஸ்கே தனது போட்டிகளை ராஞ்சியில் விளையாடியது. தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலத்தில் இருக்கும் தோனி, தனது சொந்த ஊர் ரசிகர்களுக்கு முன்னால் ‘மஞ்சள்’ உடையில் விளையாடுவதைப் பார்க்க அம்மாநில ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைய உள்ளது.
வேறு எந்த மைதானங்கள் பரிசீலனை
சென்னை அணியின் மாற்று மைதானங்களின் பட்டியல் ராஞ்சி மட்டுமின்றி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானமும் சிஎஸ்கே-வின் பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே 2018ஆம் ஆண்டு காவேரி போராட்டத்தின் போது, சென்னை விளையாட வேண்டிய அனைத்து போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டன. அங்கேயும் சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், புனேவும் பரிசீலனையில் உள்ளது. மேலும், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் மைதானமும் இந்த முறை போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகிறது.
ரசிகர்களின் ரியாக்ஷன்
தல தோனியை சேப்பாக்கத்தில் பார்ப்பது தான் எங்களுக்குப் பெருமை. ஆனால் தேர்தலுக்காக போட்டிகள் மாற்றப்படுவது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும், அவர் தனது சொந்த மண்ணான ராஞ்சியில் விளையாடுவதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு வந்துள்ள நிலையில், அவருடைய சொந்த மாநிலமான திருவனந்தபுரத்திலும் போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள், கேரள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More