ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ வீரர்களும், உள்ளூர் நிர்வாகக் குழுக்களும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். கடினமான நிலப்பரப்பு, மோசமான வானிலைச் சூழல் இருந்தபோதிலும் ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்தது.
இந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்குச் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக உதம்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தோடாவில் நடந்த துரதிஷ்டவசமான சாலை விபத்தில் நமது 10 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது, மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது வீரர்களின் சிறப்பான சேவையையும், உன்னத தியாகத்தையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில், ஒட்டுமொத்த தேசமும் துயரமடைந்த குடும்பங்களுடன் ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் துணை நிற்கிறது. காயமடைந்த 10 வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சாத்தியமான சிறந்த சிகிச்சையை உறுதி செய்யுமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.