பாகிஸ்தான்: வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. குல் பிளாசாவில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படும் கடைகள் உள்பட கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான காவல் துறை டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா கூறும்போது, துபாய் கிராக்கரி என்ற பெயரிடப்பட்ட ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன என கூறினார். இதுதவிர 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது. எனினும், மரபணு பரிசோதனை அறிக்கைகளின் முடிவிலேயே இறுதியான விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார். ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல்வேறு கடைகளுக்கும் பரவியுள்ளது என சையது ஆசாத் தெரிவித்து உள்ளார்.

வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரின் முதல்கட்ட விசாரணை அடிப்படையில், வெடிகுண்டு தாக்குதலுக்கான தொடர்பு தெரியவரவில்லை. அதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்க பெறவில்லை என்றும் அவர் இன்று கூறினார்.

சம்பவத்தன்று, தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. தீவிர போராட்டத்திற்கு பின்னர் ஞாயிறு இரவே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீப்பிடித்து, கரும்புகை பரவி அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால், மீட்பு குழுவாலும் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், தீ அணைக்கப்பட்ட பின்னர், உள்ளே சென்று பார்த்ததில், உடல் கருகிய நிலையில் பலர் உயிரிழந்து கிடந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எல்லா தளங்களிலும் சேர்த்து மொத்தம் 1,200 கடைகள் இருந்துள்ளன. இதனால், வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அதனுடன் விடுமுறை நாளும் சேர்ந்து கொண்டது. இது தீ விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.