டாப் ரேஸில் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். ஸ்பார்ட்டிஃபையில் 13 பில்லியன் ஸ்ட்ரீம்களைக் கடந்த முதல் தென்னிந்திய இசைக்கலைஞர் என்ற சாதனையை படைத்தவர் என்ற பெருமை அனிக்கு கிடைத்திருக்கிறது. அவரது அதிரடி இசையமைப்பில் விஜய்யின் ‘ஜன நாயகன்’, பிரதீப்ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸை நோக்கி இருக்கிறது. அடுத்தும் டாப் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அவரது லைன் அப்கள் வியக்க வைக்கிறது.

சமீபத்தில் ‘ஜன நாயகன் ‘ இயக்குநர் ஹெச். வினோத் நமக்களித்த பேட்டியில் அனிருத்தின் உழைப்பை பாராட்டியிருந்தார். ”அவரை மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததே இல்ல. சில பேரை நாம ‘அவனுக்கு அதிர்ஷ்டம் அடிச்சுக்கிட்டே இருக்குது. தொடர்ந்து நல்ல நேரம் அமையுது’னு நினைப்போம் இல்லையா! அப்படி ஒரு எண்ணம், அனிருத்தை பார்க்கும் போது உடைஞ்சிடுச்சு.
ஏன்னா, பேய்த்தனமா வேலை செய்றார். ராத்திரியும், பகலுமா வேலை செய்யுற அவரோட எனர்ஜியை என்னால எதோடவும் பொருத்த முடியல. அவர் ஒரு பாடல் அனுப்புவார். சூப்பரா இருக்குதுனு சொல்வேன். அதற்கு அவர் ‘தலைவரே அது வெறும் 3.5 பர்சன்ட் தான். இன்னும் 10 பர்சன்ட், 40 பர்சன்ட் 100 பர்சன்ட்னு அடுத்தடுத்து வரும்’னு சொல்லுவார். அவர் எனக்கு முதல்ல அனுப்பினதே முழுமையானதா இருக்கே.. இதற்கப்புறம் என்ன பண்ணிடுவார்’னு நினைப்பேன்.

ஆனா, அனி சொன்னது மாதிரி ஒவ்வொரு விஷயங்களாக சேர்த்து செதுக்கி அடுத்தடுத்த பர்சன்ட்ல வந்து நிறைவா ஒரு blast ஆக அழகா வந்து நிற்கும். அப்படி அசூரத்தனமா உழைப்பார். ஒரு படத்துல வேலை செய்யுறோம்னு நினைக்காமல், இது நம்ம படம். நாம தான் ஹிட்டு கொடுக்கணும்னு நினைச்சு, தோள்ல தூக்கி வச்சுக்கற ஒருத்தர் தான் அனிருத்! உண்மையில் நான் அவரோட ஒர்க் பண்ணினது கிஃப்டட் தான்!”.என்று நெகிழ்ந்து சொல்லியிருந்தார்.
அனியின் லைன் அப்
‘ஜவான்’ வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின் ‘கிங்’ படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட்டில் ‘சலாம் நமஸ்தே’, ‘ஃபைட்டர்’, ‘வார்’ ஆகிய படங்களின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் என பலரும் நடிக்கும் இப்படம் இந்தாண்டு கடைசியில் வெளியாவதால், அதன் பாடல்கள் கம்போஸிங்கில் இருக்கிறார்.
நானியின் ‘தி பாரடைஸ்’ வருகிற மார்ச் 26ம் தேதி வெளியாகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவு பெற்றதுடன், டீசர், சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரக்காத்திருக்கிறது.

அனிருத்தின் குட்புக்கில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் ஹீரோவாக நடிக்கும் ‘டிசி’ படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த படத்திற்கும் இசையமைத்து வரும் அனி, லோகேஷ் அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து இயக்கும் ‘ஏஏ 23’வது படத்திற்கும் இசையமைக்கிறார்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நிறைவு பெரும் தருணத்தில் இருக்கிறது. ரஜினியின் போர்ஷன் நிறைவு பெற்றுவிட்டதாக தகவல். பிப்ரவரிக்கு பிறகு இதன் பின்னணி இசைக்கோர்ப்பிற்கு வருகிறார் அனி.
அதனைப் போல கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 173’ படத்திற்கும் இசையமைக்கிறார். அதற்கான பாடல்கள் கம்போஸிங்கும் ஒரு பக்கம் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது. வெற்றிமாறனுடன் முதல் முறையாக இணையும் ‘அரசன்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதற்கான மான்டேஜ் பாடல்களும் ரெடியாகி வருகின்றன. அஜித் – ஆதிக் படத்திலும் இணையலாம் எனத் தகவல்.
இது தவிர விஜய்யின் ‘ஜன நாயகன்’, பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ஆகிய படங்களும் திரைக்கு வர ரெடியாக இருக்கிறது.!