'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' – தூதுவிட்ட விசிக… குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், ‘ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்’ என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள்.

தந்தை – மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க’-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் ‘ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்’ என கதவை திறந்தும் வைத்திருக்கிறது அ.தி.மு.க.

ராமதாஸ்
ராமதாஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர், “எடப்பாடி பழனிசாமியுடன் கைகோப்பதுதான் மருத்துவர் ஐயாவின் விருப்பம். ஆனால் அவரோ டெல்லியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்புமணியை முதலில் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்குப் போனால் அது தன்மானத்துக்கே இழுக்காகிவிடும். ஆகையால் தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் வி.சி.க எங்கள் கூட்டணிக்குத் தடையாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க-வை மீட்க கட்சி தொடங்கிவிட்டு அ.தி.மு.க-வுடனேயே கூட்டணி அமைத்திருக்கிறது அ.ம.மு.க. ஆக, ஒவ்வொரு சதவிகித வாக்கும் முக்கியம்” என்றனர்.

”பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா?” என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, “ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள்.

திருமாவளவன், ஸ்டாலின்

அதன்படி ‘ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்’ என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள்” என்றனர்.

முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.