மங்காத்தா: 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் 'தல’ சினிமா! – 15 ஆண்டுகளுக்குமுன் விகடன் விமர்சனம்

அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படம், இன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ரீரிலீஸ் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் இதனால் உற்சாகமாக உள்ளனர்.

மங்காத்தா படம் 2011 -ம் ஆண்டில் வெளியானது. அப்போது அப்படத்துக்கு ஆனந்த விகடன் வழங்கிய விமர்சனம் இங்கு மீண்டும்…. பார்க்கலாமா..!

மங்காத்தா
மங்காத்தா

கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே ‘மங்காத்தா’!

‘தல ரசிகர்’களுக்காக ‘தல ரசிகர்’களால் உருவாக்கப்பட்ட ‘தல’ சினிமா! சஸ்பென்சனில் இருக்கும் போலீஸ் அஜீத். மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, மும்பையில் வைத்துக் கைமாற்றுகிறார் மாஃபியா புள்ளி ஜெயப்ரகாஷ். அவரிடம் இருந்து 500 கோடியை ‘லபக்’கத் திட்டமிடும் நான்கு கெட்டவன்களுடன் ஐந்தாவது கெட்டவனாகக் கை கோக்கிறார் அஜீத். இந்த மாஃபியா மங்காத்தாவில் 500 கோடியை யார் கைப்பற்றுகிறார்கள் என்ற ரேஸ் சேஸ்தான் மங்காத்தா ஆட்டம்!

நம்புவீர்களா? அஜீத் படத்தில், ஹீரோ என்று யாருமே இல்லை. எல்லோரும் கெட்டவர்கள். அதிலும் அஜீத் அநியாயத்துக்குக் கெட்டவர். சமூகத்துக்கு நல்லது செய்யும் மாஸ் ஹீரோ படங்களின் ‘கோல்டன் ரூல்’ விதியை உடைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு வெல்டன்!  

ஆன்ட்டி ஹீரோவாகக்கூட அல்ல… முழு வில்லனாகவே அஜீத். தாடி, முடியில் நரையுடன் ”மே வந்தா எனக்கு 40 வயசாகுது” என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுப்பது, படுக்கையில் இரவைக் கழித்த லட்சுமி ராயிடம் ”நீ யார்? எதுவும் தப்பா நடந்துக்கிட்டேனா?” என்று அப்பாவியாகக் கேட்பது, காதலியின் அப்பாவை ஓடும் காரில் இருந்து தள்ளிவிடுவது, பண வெறியில் நண்பர்களை டப் டுப் என்று சுட்டுக் கொல்வது, சகட்டுமேனிக்குக் கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பது என துவம்ச உற்சவம் நடத்தி இருக்கிறார். ஸ்க்ரீனில் தோன்றும் சமயம் எல்லாம் லாஜிக் மறந்து ‘ஒன் மேன் ஷோ மேஜிக்’கில் அசரவைக்கிறார் அஜீத்!

அஜித்

சின்சியர் ஆபீஸர் என்ற பழகிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக ஃபிட் ஆகிறார் அர்ஜுன். த்ரிஷா (தம்துண்டு கேரக்டருங்கோ!) அளவாக, அழகாக இருக்கிறார்… அவ்வளவே! படத்தில் அஞ்சலி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் ஆகியோர் இருக்கிறார்கள். அஜீத் ஓட்டும் ஸ்விஃப்ட் கார்கூடப் படத்தில் இவர்களைவிட அதிகத் திருப்பத்தில் பங்கெடுக்கிறது!

‘சரக்கு’ சம்பந்தப்பட்ட இடங்களில் மட்டுமே புன்னகைக்க வைக்கிறது வசனங் கள். சமய சந்தர்ப்பம் இல்லாமல் துருத்தும் பாடல் காட்சிகளும் பிரேம்ஜியின் ஸ்டீரியோ டைப் காமெடியும்… ஆவ்வ்!  

நான்கு ‘கெட்டவன்’களில் வைபவ் மட்டுமே தேறுகிறார். 500 கோடியை அடிப்பதற்கு எப்படி பக்கா மாஸ்டர் பிளான் போட வேண்டும்? ஒரு கன்டெய்னர், ஒரு வேன், ஒரு கிரேன், ஒரு லேப்டாப்… ஸோ சிம்பிள். ரூம் போட்டு யோசிச்சுருக்கலாமே பாஸ்!  

யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘விளையாடு மங்காத்தா’ பாடல் மட்டும் சுறுசுறு சுதி. அஜீத் நிற்கும், நடக்கும், பறக்கும் காட்சிகளில் துடிப்பு ஏற்றுகிறது பின்னணி இசை. பரபர சேஸிங் காட்சிகளில் சுற்றிச் சுழன்று அசத்துகிறது ஷக்தி சரவணனின் கேமரா.  

‘மாஸ்டர் பிரைன்’ அஜீத், எதற்குச் சாதாரண நான்கு அடியாட்களுடன் கொள்ளைக் கூட்டுவைக்கிறார்? பணம் இருக்கும் இடம் தெரிந்தும் அஜீத் அதைக் கைப்பற்றாமல் தேமே என்று இருப்பது ஏன்? இதுவும் இன்னபிறவுமாகப் படத்தின் பல இடங்களில் ‘ஸ்ட்ரிக்ட்லி நோ லாஜிக்!’

அஜீத்தை நம்பி ஆடலாம்!

மங்காத்தா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.