தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது.
அதிமுக பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
இச்சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருப்பதால் என்டிஏ கூட்டணி பலம்பெற்றிருக்கிறது. தமிழகத்தில் வலிமையான கூட்டணி எங்களுடையதுதான்.
நானும்-டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் அம்மா (ஜெயலலிதா) வளர்த்த பிள்ளைகள். ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம்.
எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒன்றாக எப்போது இணைந்தோமோ.. அப்போதே அனைத்தையும் மறந்துவிட்டோம்.

இனி அம்மா விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்ற வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்” என்று பேசியிருக்கிறார்.