டி20 உலக கோப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், பல்வேறு அரசியல் பரபரப்புகள் நிகழ்ந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகிய இருவருக்கும் இடையேயான வார்த்தை போர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கதேச அணி ஏற்கனவே டி20 உலக கோப்பையில் இருந்து விலகி உள்ள நிலையில், பாகிஸ்தானும் இந்த உலக கோப்பையை புறக்கணிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இருந்து விலகினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பாகிஸ்தான் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியே இருக்காது என்ற நிலைமை உருவாகும் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது.
Add Zee News as a Preferred Source

பங்களாதேஷ் அணி விலகல்
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிகளில் தங்களது போட்டிகளை மட்டும் இலங்கையில் மாற்றுமாறு கேட்டுக் கொண்டது. இந்தியாவில் விளையாடினால் தங்களது வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஆனால் ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி கடுமை எதிர்ப்பை தெரிவித்திருந்தார். “இந்தியாவிற்கு மட்டும் ஹைபிரிட் மாடல் அனுமதிக்கப்பட்டது. ஆனால் வங்கதேசத்துக்கு மட்டும் ஏன் அந்த சலுகை வழங்கப்படவில்லை? ஐசிசி இரட்டை வேடம் போடுகிறது. வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானும் டி20 உலக கோப்பையில் இருந்து விலகலாம்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஐசிசி எச்சரிக்கை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் இருந்து விலகுவோம் என்று தெரிவித்ததால், ஐசிசி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தான அணி பங்களாதேஷை போலவே டி20 உலக கோப்பையை புறக்கணித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐசிசி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் டி20 உலக கோப்பையை புறக்கணித்தால், வரும் காலங்களில் எந்த ஒரு அணியுடனும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்க தடை விதிக்கப்படும். இதனால் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பாகிஸ்தான் விளையாட முடியாது. மேலும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து முழுவதுமாக பாகிஸ்தான் அணி நீக்கப்படும். இது தவிர பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என்றும் ஐசிசி எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில், “வங்கதேசம் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறது. ஒரு நாடு மட்டும் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாமா? ஆனால் அதே விதிகள் மற்ற நாட்டிற்கும் கொடுக்கப்படுவதில்லை, இது அநீதி. வங்கதேசமும் பாகிஸ்தானை போல ஐசிசியில் ஒரு முழு நேர உறுப்பினர். இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் அதே சலுகை அந்த நாட்டிற்கும் வழங்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையை புறக்கணிக்கும் பட்சத்தில், ஐசிசி இந்த தடைகளை விதித்தால் பாகிஸ்தான் என்ற கிரிக்கெட் அணி வரும் காலத்தில் இல்லாமல் போகும். காரணம் சர்வதேச போட்டியில் விளையாடுவதன் மூலமே ஒரு கிரிக்கெட் வாரியத்திற்கு வருமானம் கிடைக்கும். உள்நாட்டு தொடரில் விளையாடுவதன் மூலம் மட்டுமே ஒரு வாரியத்தை நடத்த முடியாது. ஐசிசி தடை விதித்தால் பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வரையும் பின்னோக்கி செல்லும். இன்னும் பாகிஸ்தான அணி அதிகாரப்பூர்வமாக இந்த தொடரில் இருந்து வெளியேறவில்லை. ஏற்கனவே இந்தியாவிற்கு பயணம் செய்ய மாட்டோம் என்று பாகிஸ்தான் அணி தெரிவித்ததால், பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
RK Spark