”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர்.

திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்

சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள்.

அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம்.

இணைப்பு விழா நடைபெறும் இடம்

தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள்.

ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம்

நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.