ஐபிஎல் 2026 தொடர் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர். பிப்ரவரி மாதம் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், மார்ச் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னரே ஐபிஎல் போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஐபிஎல் தொடருக்கான தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Add Zee News as a Preferred Source

ஐபிஎல்லில் தோனி
இந்த ஆண்டு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. காரணம் தற்போது உள்ள சென்னை அணியில் தோனிக்கான இடம் கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை அணியின் முக்கியமான வீரராக இருந்து வரும் தோனி, கடந்த சில சீசனங்களாக கடைசி இரண்டு ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்து வருகிறார். கடந்த சீசனில் யாருமே எதிர்பார்க்காத விதமாக சென்னை அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தது. ஐபிஎல் மெகா ஆக்சனில் சென்னை அணியின், நிர்வாகம் செய்த தவறின் காரணமாக சிஎஸ்கே அணி இந்த நிலைமைக்கு சென்றது. இருப்பினும் கடைசி சில போட்டிகளில் இளம் வீரர்களை எடுத்து பார்மிற்கு வந்தது சென்னை அணி. இந்நிலையில் ஐபிஎல் 2026ல் மொத்தமாக இளம் வீரர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே மாறி உள்ளது. இதனால் தோனியின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
அஸ்வின் கருத்து
தோனி ஐபிஎல் 2026-ல் ஒரு சில போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது youtube சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், தோனி இந்த சீசனில் மூன்றாவது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். “தோனி ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை தொடங்கியுள்ளார். இந்த முறை கூடுதல் உடற்தகுதியுடன் காணப்படுகிறார். அவர் பிளேயிங் 11ல் இடம் பெற மாட்டார் என்று சிலர் பேசுகின்றனர். ஆனால் அவர் இம்ரான் தாஹிரைப் பார்த்து உத்வேகம் அடைந்திருப்பார் என்று தோன்றுகிறது.

அவர் கடைசி சில ஓவர்களில் மட்டும் இந்த முறை களமிறங்க போவது போல் தெரியவில்லை. அவர் பவர்பிளே முடிவதற்குள் மூன்றாவது இடத்தில் பேட்டிங் இறங்கி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்வார் போல தெரிகிறது” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அஸ்வின், “சென்னை அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ருதுராஜ் கெயிக்வாட், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மேத்ரே, டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே என ஒரு அசரப்படை உள்ளது. இந்த டேட்டிங் வரிசையை எந்த அணியாலும் தடுத்து நிறுத்த முடியாது. 200 ரன்களுக்கு மேல் அடிப்பது இவர்களுக்கு சாதாரணமாக இருக்கும்” என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்
ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதற்கு முன்பே சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக் கொண்டனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து ட்ரேட் செய்யப்பட்டார். மேலும் இந்த முறை மினி ஏலத்தில் கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் போன்ற இளம் வீரர்களை சென்னை அணி 14 கோடிக்கு வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முன்பு வரை அனுபவம் வாய்ந்த வீரர்களை தேடி வந்த சென்னை அணி இந்த முறை இளம் வீரர்களுக்கு மாறி உள்ளது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி எந்த இடத்தில் விளையாடுவார் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
About the Author
RK Spark