பாட்னா,
பீகாரில் பாட்னா மாவட்டத்தில் 18 வயது மாணவி ஒருவர் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். விடுதியில் தங்கியிருந்த அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயக்கமான அவரை சக மாணவிகள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரு வாரமாக கோமா நிலையில் இருந்த மாணவி கடந்த 11-ந்தேதி திடீரென இறந்தார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது உடைகளை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், அதில் ஆணின் உயிரணுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இதனால் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்ததது.
இந்த வழக்கில் கடமை தவறிய கூடுதல் அதிகாரி ஹேமந்த் ஜா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரோஷ்னி குமாரி ஆகிய இருவரை பாட்னா போலீஸ் சூப்பிரண்டு அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.