டபுள் கேம் பிரேமலதா.. கடுப்பில் கட்சிகள்!
“ஜனவரி மாநாடு… கடலூர் மைதானம்… கூட்டணி அறிவிப்பு!” – கடந்த ஆறு மாதமாக கேப்டன் கட்சித் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட ‘பில்டப்’ இதுதான். மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அந்தப் பெட்டியைப் பத்திரப்படுத்தி, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு கடந்த 9-ம் தேதி கடலூரில் திரண்டார்கள் தொண்டர்கள். ஆனால், மேடை ஏறிய பிரேமலதா கொடுத்ததோ செம ஷாக்!
“சீட்டு என்கிட்டதான் இருக்கு… ஆளுங்கட்சிகளே இன்னும் வாயைத் திறக்காதப்போ நாங்க ஏன்பா அவசரப்படணும்?” என நிதானம் காட்ட, ஆடிப்போய்விட்டார்கள் தொண்டர்கள்.

இதையடுத்து ஒரு பக்கம் ‘உதய சூரியன்’, மறுபக்கம் ‘இரட்டை இலை’ என இரண்டு பக்கமும் பிரேமலதா தூது விடுகிறார் என்கிற விமர்சனம் கிளம்பியது. தே.ஜ கூட்டணியில் இழுக்க பியூஸ் கோயலும், அறிவாலயத்துக்கு அழைத்து வர அமைச்சர் ஏ.வேலுவும் மல்லுக்கட்டுகிறார்கள்.
பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த அந்த முதல் நாள் வரை பியூஸ் கோயல் தரப்பு ‘கோயம்பேடு’ கட்சியுடன் பேசி வந்தது. அங்கேயும் ஒரு முடிவும் எட்டப்படாததால், “அப்படியே யூ-டர்ன் போட்டு தி.மு.க-வுக்குத்தான் பிரேமலதா செல்வார்” எனப் பேச்சுக்கள் கிளம்பியது.
இப்படிப்பட்ட கிளைமாக்ஸ் சூழலில்தான் ஆளுநரின் தேநீர் விருந்து நடந்தது. அதில் பங்கேற்ற தே.மு.தி.க பொருளாளர் சுதீஷை, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வளைத்துப் பிடித்து நீண்ட நேரம், ‘குசலம்’ விசாரித்திருக்கிறார். இந்தத் தனிப்பட்ட பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. உண்மையிலேயே கோயம்பேடு கட்சியில் என்னதான் நடக்கிறது.. அடுத்த மூவ் என்ன? விசாரித்தோம்…

அறிவாலயத்தின் கணக்கும்… அ.தி.மு.க-வின் பிடிவாதமும்!
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “அ.தி.மு.க ராஜ்யசபா சீட் வழங்க மறுத்ததால் பிரேமலதா ஏற்கெனவே அதிருப்தியில் இருந்தார். அதே சமயம், வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதால், ம.தி.மு.க 12 இடங்களைக் கேட்டு திமுகவுக்குக் குடைச்சல் கொடுத்தது. அந்தச் சமயத்தில்தான் அறிவாலயத்தில் நடந்த மா.செ-க்கள் கூட்டத்தில், ‘ம.தி.மு.க-வை விட தே.மு.தி.க களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது. அவர்களைக் கூட்டணிக்குள் கொண்டு வருவது பலம் சேர்க்கும்’ என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. உடனே முதல்வர் ஸ்டாலின், ‘ஏ.வ.வேலுவை என்னவென்று பார்க்கச் சொல்லுங்கள்’ என க்ரீன் சிக்னல் காட்டினார்.”
இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தையில், பிரேமலதா தரப்பு 18 இடங்கள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் தேர்தல் நிதி எனப் பெரும் பட்டியலை நீட்டியுள்ளது. இதற்கிடையில் அ.தி.மு.க தரப்பில் ராஜேந்திர பாலாஜி மூலம் சமாதானத் தூது போனது. அங்கும் 30 இடங்கள் மற்றும் ராஜ்யசபா சீட் கேட்கப்பட, எடப்பாடி பழனிசாமி அதற்கு உடன்படவில்லை. தமிழகத்தில் தே.ஜ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பியூஸ் கோயலிடம் இருக்கிறது.

அவர் பேசியபோதும், “30 இடங்கள், ஒரு ராஜ்யசபா, ஒரு மத்திய அமைச்சர் பதவி” எனப் பிரேமலதா தரப்பு எதிர்பார்ப்புகளை அள்ளி வீசியிருக்கிறது. ஆனால், “ஒற்றை இலக்கத்தில்தான் சீட் தர முடியும்” என டெல்லி மேலிடம் கறாராகக் கூறிவிட்டதால்தான், பிரதமர் பங்கேற்ற மாநாட்டில் பிரேமலதா கலந்துகொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க தரப்போ, “6 இடங்கள் மட்டுமே தர முடியும், ஆனால் தேர்தல் செலவுகளை நாங்கள் கவனிக்கிறோம்” எனத் தூண்டில் போட்டிருக்கிறது.
நயினாரின் ‘டீ’ பார்ட்டி வியூகம் பலிக்குமா?
இதையடுத்து அறிவாலயத்தை நோக்கி வண்டி திரும்பும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில்தான், ஆளுநர் விருந்தில் சுதீஷை நயினார் சந்தித்து ‘குசலம்’ விசாரித்தார். “கூட்டணியை முதலில் அறிவியுங்கள், மற்ற விவரங்களை பிறகு பேசிக்கொள்ளலாம்” என நயினார் வலியுறுத்தியும், சுதீஷ் பிடிகொடுக்கவில்லை. முன்னதாக பெங்களூரு வழியாக டெல்லி சென்று பா.ஜ.க மேலிடத்தைச் சந்தித்த சுதீஷ், தனது கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்ததால் டெல்லி தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

மறுபுறம், இரண்டு தரப்பிலும் ஒரே நேரத்தில் பேரம் பேசுவது முதல்வர் ஸ்டாலினைச் சினமடையச் செய்திருக்கிறது. “பிப்ரவரியில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்” என பிரேமலதா கூறி வந்தாலும், இறுதி நிமிடம் வரை மௌனம் காப்பதுதான் தே.மு.தி.க-வின் ‘சிக்னேச்சர் ஸ்டைல்’. அந்த ரகசியப் பெட்டிக்குள் இருப்பது உதயசூரியனா அல்லது இலையுடன் கூடிய தாமரையா என்பது பிப்ரவரி இறுதியில் தெரிந்துவிடும்!” என்றனர்.