இந்தியா மட்டுமல்ல… உலகமே மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த மாற்றத்திற்கு தன்னை தகவமைத்துக் கொள்ள இந்தியா எப்போதோ தொடங்கிவிட்டது. அந்தத் தகவமைப்புகளுக்கு உதவும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக, மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனத் துறைக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தத் திட்டங்களைத் தாண்டி, தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, இப்போது இந்தத் துறைக்கு என்ன திட்டங்கள் வேண்டும் என்பதை விளக்குகிறார் சர்வதேச பொது போக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் Dr. வளவன் அமுதன்.

“2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஐந்து அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று எலெக்ட்ரிக் வாகனத் துறையில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்று, எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு ஆகும் செலவு 40 – 45 சதவிகிதம் அதன் பேட்டரிக்கு செல்கிறது. இதை குறைக்க எலெக்ட்ரிக் செல் உற்பத்தி, மறுசுழற்சி, செகண்ட் ஹேண்ட் பேட்டரி கொள்முதல் போன்றவைகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
இது வாகனங்களின் விலையைக் குறைக்கும்… இது மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஆர்வமாக வாங்க வழிவகை செய்யும்.
இரண்டு, இப்போது நிறைய இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்கள் வந்துவிட்டன. ஆனால், அங்கே மின்சாரம் தான் இருப்பதில்லை.
இதை சரிசெய்ய மத்திய அரசு சார்ஜிங் ஸ்டேஷன்களை பராமரிக்கும் நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட நிதி ஒதுக்க வேண்டும்.
மூன்று, இந்தத் துறையில் தனியார் ஆபரேட்டர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்ற சலுகைகளும் செய்து தர வேண்டும். அப்போது தான், நகரங்கள் சீக்கிரம் மின்மயமாக்கப்படும்.

நான்கு, இப்போது இந்தியா – ஐரோப்ப ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இதில் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்துள்ளன.
அதனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் ஏற்றுமதியை மட்டும் ஃபோக்கஸ் செய்யாமல், எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு உதவும் உதிரி பாகங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மோட்டார்கள், கன்ட்ரோலர்கள் , BMS, சார்ஜர்கள், வாகன மென்பொருள் – இவை இந்தியாவின் வலிமை. இவற்றின் உற்பத்திக்கும் ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும்.
இது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத் துறையை பிற நாடுகளுக்கு எடுத்து செல்லும்.
ஐந்து, ‘எலெக்ட்ரிக் வாகனங்கள் பழுதானால் என்ன செய்வது?’ என்கிற அச்சம் மக்களை இன்னும் அந்த வாகனத்தை வாங்காமல் தடுக்கிறது. இது கிட்டத்தட்ட உண்மையும் கூட. எலெக்ட்ரிக் வாகனங்களை பழுது நீக்கும் அளவிற்கான தொழில்நுட்பமும், திறனும் இந்தியாவில் பெருமளவில் வளரவில்லை.
அதனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்விகளை ஊக்குவிக்க வேண்டும்.
இந்த ஐந்து அறிவிப்புகளும் மத்திய பட்ஜெட்டில் வெளியானால், அது இந்திய எலெக்ட்ரிக் வாகனத் துறையின் கேம் சேஞ்சராக இருக்கும்.

கடந்த பட்ஜெட்டில்…
எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தொழிற்சாலைகளுக்கு தேவையான 35 மூலதனப் பொருள்களுக்கு இறக்குமதி வரி ரத்து.
லித்தியம், கோபால்ட், பேட்டரி ஸ்கிராப்களுக்கு நுழைவு வரி இல்லை.
– போன்றவைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு வெளியான இந்த அறிவிப்புகள் எலெக்ட்ரிக் வாகனத் துறைக்கு அஸ்திவாரமாக அமைந்தது. அதனால், இந்தப் பட்ஜெட்டில் அடுத்த கட்டத்தை எதிர்பார்க்கிறோம்.