பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் அளித்தார்.
‘மயங்கினேன் தயங்கினேன்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் நடித்த ‘ஜின்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் இந்த ராஜேஸ்வரி. தமிழ்நாடு அரசின் மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் இருக்கிறார் இவர்.
இது குறித்த செய்தி சில தினங்களூக்கு முன் விகடன் தளத்தில் வெளியாகி இருந்தது.
புகார் தொடர்பாக விசாரிக்க மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி இரு தரப்புக்கும் சம்மன் அனுப்பியிருந்த சூழலில், கடந்த வாரம் தங்களூக்கு சம்மன் வரவில்லை எனச் சொல்லி தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணனும் கதிரேசனும் ஆஜராகவில்லை.
எனவே நேற்று (27/1/26) இருவரையும் கண்டிப்பாக ஆஜராகச் சொல்லி உத்தரவிடப் பட்டிருந்தது.
அதன்படி நேற்று ஆணையத்தில் ராஜேஸ்வரி, கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகிய மூவருமே ஆஜர் ஆகினர்.
புகார் தாரரான ராஜேஸ்வரியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ராதாகிருஷ்ணன், கதிரேசன் இருவரிடமும் விசாரித்தார் குமாரி.

ஆரம்பத்தில் ராதாகிருஷ்ணன், கதிரேசன் இருவருமே, `சங்கத்தைப் பொறுத்தவரை செயற்குழுவும் தலைவருமே இறுதி முடிவெடுப்பவர்கள் எனவும் இந்த விவகாரத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்ல்லை’ எனவும் கூறினார்களாம்.
ஆனால் ராஜேஸ்வரிக்கு அனுப்பிய எல்லா கடிதங்களிலும் செயலாளர்களே கையெழுத்திட்டிருப்பதால், அதை ஏற்க மறுத்த குமாரி, ஆணையத்தின் விசாரணையை சீரியஸாக எடுத்து பதில் அளிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
தொடர்ந்து ‘ராஜேஸ்வரியை தாங்கள் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை’ எனவும், `அவரை மீண்டும் சங்கத்தில் சேர்க்கவோ அல்லது வரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ தங்களால் எந்த உத்தரவாதமும் உடனே தர முடியாது; செயற்குழுவுக்குதான் அந்த அதிகாரம் உள்ளது’ எனவும் கூறியிருக்கிறார்கள்.
விசாரணை குறித்து ராஜேஸ்வரியிடம் பேசினோம்.
”நான் தெரிவித்த குற்றச்சாட்டுகளூக்கான ஆதாரத்தை ஆணையத்துல கொடுத்துட்டேன். விசாரணை குறித்து விரிவா எல்லாத்தையும் பேச முடியாது.. ஏன்னா இன்னும் விசாரணை இருக்கு. ஆனா அவங்க ரெண்டு பேரும் என் மீது சில குற்றச்சாட்டுகளைச் சொன்னாங்க. பெண் மாதிரியே நான் நடந்துக்கறதில்லைனு ஒரு புகார் சொன்னாங்க. பெண் எப்படி நடந்துக்கிடணும்னு இவங்கதான் தீர்மானிப்பாங்க போல.
குற்றச்சாட்டுகளைச் சொன்னா கையோடு ஆதாரமும் கொண்டு வந்திருக்கணுமே, அதைக் கேட்டா, அதுக்கு அவகாசம் கேட்டிருக்காங்க. தேர்தல் வரைக்கும் எப்படியாவது இழுத்தடிச்சு என்னை போட்டியிட விடாம தடுக்கணும்கிறதுதான் அவங்க நோக்கம்’ என்கிறார் ராஜேஸ்வரி.

விசாரணையின் போது ராதாகிருஷ்ணன், ‘மேடம் நீங்களும் நம்ம கட்சிதான். நானும் பார்ட்டி ஆளுதான். என் மனைவி திமுக-வுல ஜெயிச்சுதான் சேர்மனா இருக்காங்க” எனச் சொல்ல, ‘அதெல்லாம் இங்க பேசக் கூடாது; இங்க கமிஷன் கேக்கற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க’ எனக் கறாராகப் பேசி விட்டாராம் குமாரி.
மேலும் ‘பொண்ணு மாதிரி நடந்துக்க மாட்டேங்குறாங்க இவங்க’ என்ற சங்க நிர்வாகிகளின் கமென்டுக்கும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தாராம்.

கதிரேசனிடம் பேசினோம், ”பெண்களுக்கு உரிய மரியாதையைத் தந்துட்டுதான் வர்றோம். சங்கத்தில் சுமார் 250 பெண் தயாரிப்பாளர்கள் இருக்காங்க. இவங்க மட்டும்தான் மகளிர் ஆணையத்துக்கு எங்களை இழுத்திருக்காங்க. சங்கத்தின் நலனுக்கெதிரா செயல்பட்டாங்கனு செயற்குழுதான் அவங்க மேல நடவடிக்கை எடுத்திருக்கு. நானோ ராதாகிருஷ்ணனோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புல எதையும் செய்யலை’ என்றவரிடம்,
‘உங்கள் முன்னிலையிலேயே ராதாகிருஷ்னன் ஆணையத்தில் தான் திமுகவைச் சேர்ந்தவர் எனச் சொன்னாராமே’ எனக் கேட்டதற்கு, ‘அப்படி எதுவும் பேசின மாதிரி எனக்கு ஞாபகமில்லை’ என முடித்துக் கொண்டார்.