"மேதி என் தாய்": நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவில் முள்ளு குரும்பர், பெட்டக் குரும்பர், ஆலுக்குரும்பர் ஆகிய மூன்று பிரிவினர் உள்ளனர்.

குரும்பர் பழங்குடியினர் பெரும்பாலும் கூடலூர் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகிலுள்ள பொக்கபுரம், குரும்பாடி போன்ற பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர். இம்மக்கள் வேளாண்மை, காட்டுப் பொருள்கள் சேகரித்தல், காடு சார்ந்த பொருள்களை பயன்படுத்தி கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கால்நடை வளர்ப்பு போன்ற இயற்கை சார்ந்த தொழில்களே செய்து வருகின்றனர். 

இந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயதேயான ரவிக்குமார் பெட்டக்குரும்பர் இனத்தின் முதல் புகைப்படக் கலைஞராகியிருக்கிறார். 

ரவிக்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்து அவரோடு அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்,

“என் குடும்பத்தில் மொத்தம் என்னுடன் பிறந்தவர்கள் 5 பேர். நான் நான்காவதாக பிறந்தவன். எனக்கு ஆரம்பத்தில் புகைப்படங்கள் மீதெல்லாம் ஆர்வம் கிடையாது. அரசுத் துறையில் சேர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தனியார் தேர்வு மையங்களில் சேர்ந்து போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தேன். என்னுடைய இளங்கலை பட்ட படிப்பை நான் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் முடித்தேன் . அந்த கல்லூரி படிப்பையும்  நிறைய குடும்ப பிரச்னை, பொருளாதார பிரச்னைகளைக் கடந்து தான் படித்து முடிச்சேன்.

பழங்குடியின மக்களுக்காக தொண்டாற்றி வரும் தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து 7 மாதங்கள் பணி புரிந்தேன்.  அந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக மார்ட்டின் ஜோஸ் என்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவர்கிட்ட தான் நான் முதன்முதலா கேமராவைப் பார்த்தேன். எனக்கு கேமரா மேல ஆர்வம் இருக்குன்னு தெரிஞ்சு மார்ட்டின் ஜோஸ் அண்ணா விவேக் மாரியப்பன் அண்ணாவ எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சாரு. விவேக் மாரியப்பன் அண்ணா எனக்கு பழனிக்குமார் அண்ணாவ‌ அறிமுகம் செஞ்சு வச்சாரு. அவரு ஒரு போட்டோகிராபர். பழனிக்குமார் அண்ணா கிட்ட எனக்கு அறிமுகம் கிடைச்ச பிறகு நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன்.

‘எங்களோட வாழ்வியலை தான் கண்காட்சியாக வைத்தேன்’

பழனி அண்ணா கிட்ட ஒரு போட்டோகிராபி ஸ்டூடண்டா சேர்ந்து போட்டோகிராபி கத்துக்கிட்டு இருக்கேன். அவர் கூட சேர்ந்த பிறகு தான் முதன் முதலில் நான் என்னுடைய அம்மாவை எங்க மொழியில ‘யன் அப்பி மே’ அதாவது ‘மேதி என் தாய்’ அப்படின்ற ஒரு தலைப்புல எங்க அம்மாவோட புகைப்படங்கள் எல்லாம் ஒரு ஆவண படமா எடுத்தேன். அப்புறம் நா போட்டோகிராபி கண்காட்சி நடத்தி இருக்கேன். அந்த கண்காட்சியில் முழுவதும் பழங்குடியின மக்களோட புகைப்படங்கள், மக்களோட வாழ்விடங்கள், கலாசாரம்ன்னு பழங்குடிகளோட வாழ்வியலை ஆவணமா வைத்து புகைப்பட கண்காட்சி நடத்தினேன். 

கடந்த மூன்று வருஷத்துல நான்கு புகைப்பட கண்காட்சி நடத்தியிருக்கேன். எங்க சொந்த ஊரான ஊட்டியிலும் ஒரு கண்காட்சி நடத்தினேன்.

 இப்போ பழனிக்குமார் அண்ணா கூட சேர்ந்து பலவிதமான தலைப்புகளில் புகைப்படங்களையும் ஆவணப் படங்களையும் செஞ்சுட்டு இருக்கேன். இது மட்டும் இல்லாம நான்  கத்துக்கிட்டதை எல்லாருக்கும் கத்துக்கொடுக்கணும்னு ‘மாதிரி பள்ளிகளுக்கு’ சென்று பயிற்சி கொடுத்துட்டு இருக்கேன்.

இப்ப நான் ஏ சி ஜே அப்படிங்கிற ஒரு இன்ஸ்டிடியூட்டில இதழியல் துறையில் வழிகாட்டியாக தமிழ்நாடு ,கேரளா ,கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளை பலவித தலைப்புகளில் புகைப்படங்களாகவும் ஆவணப் படங்களாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ” என மனம் நிறைய பேசி முடித்தார் ரவிக்குமார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.