நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2025:`லைஃப்டைம் அச்சீவ்மென்ட்' – KMCH குழுமத்தின் சேவைக்கு பாராட்டு! | Live

தன் மண்ணுக்கே சேவை…

சிவகுமரன் - சி.கே. குமரவேல் - பி. ஸ்ரீனிவாசன்
சிவகுமரன் – சி.கே. குமரவேல் – பி. ஸ்ரீனிவாசன்

நாணயம் விகடன் ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2026’ விழாவில், வாழ்நாள் சாதனையாளருக்கான ‘லைஃப்டைம் அச்சீவ்மென்ட்’ (Lifetime Achievement) விருது, கோவை மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிட்டல் (KMCH) குழுமத்தின் தலைவர் நல்லா ஜி. பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை நேச்சுரல்ஸ் (Naturals) நிறுவனத்தின் இணை நிறுவனர் சி.கே. குமரவேல் மற்றும் விகடன் குழும மேலாண் இயக்குநர் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து வழங்க, KMCH மருத்துவமனையின் சி.இ.ஓ ஜே. சிவகுமரன் பெற்றுக்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லா ஜி. பழனிசாமி, அமெரிக்காவில் மருத்துவத்தில் உயர் கல்வி பயின்றார். ஆனால், தன் மண்ணுக்கே சேவை செய்ய வேண்டும் என்ற வேட்கையுடன், 1990-ல் கோவையில் 200 படுக்கைகளுடன் KMCH மருத்துவமனையைத் தொடங்கினார். இன்று அது 2,250 படுக்கைகளுடன், 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்களைக் கொண்ட ஒரு மாபெரும் மருத்துவ சாம்ராஜ்யமாக உயர்ந்துள்ளது. தரமான மருத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு அளப்பரியது.

விருதைப் பெற்றுக்கொண்ட சிவகுமரன், “நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சையே முதன்மையானது; பணம் இரண்டாவதுதான் என்ற கொள்கையுடனே எங்கள் நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது” என்று பெருமிதத்துடன் கூறினார்.

சி.கே. குமரவேல் பேசுகையில், “நல்லா ஜி. பழனிசாமி ஒரு லெஜண்ட் (Legend). கோவிட் காலத்தில் அவர் ஆற்றிய பணி மகத்தானது. ஒரு தொழில்முனைவோராக அவர் உருவாக்கிய கட்டமைப்பு, கோவையின் மருத்துவ வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது” என்று புகழாரம் சூட்டினார்.

100 ஆண்டுகால சேவைக்கு மகுடம்

நாராயணன் - ஜான்சன் அசரியா
நாராயணன் – ஜான்சன் அசரியா

நாணயம் விகடன் நடத்திய ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2026’ விழாவில், சிறந்த சமூகப் பங்களிப்புக்கான ‘சோஷியல் கான்ஷியஸ்னஸ்’ (Social Consciousness) விருது, முருகப்பா குழுமத்தின் ஏ.எம்.எம் ஃபவுண்டேஷன் (AMM Foundation) அமைப்பிற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை சத்யா ஏஜென்சீஸ் (Sathya Agencies) நிறுவனத்தின் சேர்மன் ஜான்சன் அசரியா வழங்க, ஏ.எம்.எம் ஃபவுண்டேஷனின் துணைத் தலைவர் நாராயணன் பெற்றுக்கொண்டார்.

1924-ம் ஆண்டு திவான் பகதூர் ஏ.எம். முருகப்ப செட்டியாரால் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் ஒரு சிறிய மருத்துவமனையாகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று 100 ஆண்டுகளைக் கடந்து விருட்சமாக வளர்ந்துள்ளது.

5 மருத்துவமனைகள், 6 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 4 பள்ளிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி என விரிவடைந்துள்ள ஏ.எம்.எம் ஃபவுண்டேஷன், எளிய மக்களுக்குத் தரமான மருத்துவம் மற்றும் கல்வியை வழங்கி வருகிறது. மேலும், ‘நன்னீர்’ திட்டத்தின் மூலம் 35-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களைத் தூர்வாரி சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய நாராயணன், “உண்மையான வளர்ச்சி என்பது நம்மைச் சுற்றியுள்ள மக்களை உயர்த்துவதில்தான் உள்ளது. சமூக சேவையும் ஒரு சீரியஸான பிசினஸ்தான். கார்ப்பரேட் நிறுவனங்களை விட, மக்களுக்கும் அரசுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஒரு என்.ஜி.ஓ-வுக்கு அதிகம் உள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விருது வழங்கிய ஜான்சன் அசரியா, “ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்களால் முடிந்ததை சமூகத்திற்குச் செய்ய வேண்டும்” என வாழ்த்தினார்.

மூன்று நண்பர்கள், ஒரு ஐடியா, அசுர வளர்ச்சி

பிரபு -  முத்துக்குமார் - ஜி.ஆர். ஆனந்த பத்மநாபன்
பிரபு – முத்துக்குமார் – ஜி.ஆர். ஆனந்த பத்மநாபன்

நாணயம் விகடன் ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2026’ விழாவில், இந்த ஆண்டிற்கான ‘ஸ்டார்ட் அப் சாம்பியன்’ (Startup Champion) விருதைச் தட்டிச் சென்றது சென்னையைச் சேர்ந்த M2P Fintech நிறுவனம். இந்த விருதினை ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் (GRT Jewellers) நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ஆனந்த பத்மநாபன் வழங்க, M2P Fintech நிறுவனத்தின் இணை நிறுவனர்களான பிரபு மற்றும் முத்துக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

“மூன்று நண்பர்கள், ஒரு ஐடியா, அசுர வளர்ச்சி” – இதுதான் M2P Fintech-ன் சுருக்கமான வரலாறு. மதுசூதனன், முத்துக்குமார், பிரபு ஆகியோரால் 2014-ல் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், இன்று ஆசியாவின் மிகப்பெரிய API இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வெறும் 10 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கி, இன்று 850 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்து, 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம்பதித்துள்ளது M2P.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய பிரபு, “நாங்கள் சிறுவயது முதலே விகடனின் தீவிர வாசகர்கள். விகடன் எப்படி 100 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கிறதோ, அதேபோல M2P நிறுவனத்தையும் ஒரு நூற்றாண்டு நிறுவனமாக (Generational Company) வளர்த்தெடுப்பதே எங்கள் கனவு. எங்கள் 20 ஆண்டுக்கால நட்பும், ஒருவருக்கொருவர் வைத்துள்ள நம்பிக்கையுமே (Trust) இந்த வெற்றியின் அடிப்படை” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விருது வழங்கிய ஆனந்த பத்மநாபன், “சமூகத்தில் வளம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் உருவாக்குபவர்கள் தொழில்முனைவோர்களே. தொடர்ந்து சாதியுங்கள்… இந்தியாவிற்குப் பெருமை சேருங்கள்” என உற்சாகப்படுத்தினார்.

ஸ்டார்ட்அப் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர்

அமைச்சர் நேரு - சி.டி குமார்
அமைச்சர் நேரு – சி.டி குமார்

நாணயம் விகடன் நடத்தும் ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2026’ விழாவில், கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவரும், எண்ணற்ற இளம் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவருமான டி.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு “பிசினஸ் மென்டார்” (Business Mentor) விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கி சிறப்பித்தார். மேலும், “கொங்கு மண்டலத்தில் எண்ணற்ற இளைஞர்களின் ஸ்டார்ட்அப் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர். பிசினஸ் மாடல், Vision, மற்றும் தொழிலை எப்படி பெரிதாக்குவது (Scalability) எனப் பல்வேறு உத்திகளைக் கற்றுத்தரும் `கைடிங் போர்ஸ்’ (Guiding Force) இவர்” என வாழ்த்தினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சி.டி.குமார், “சொத்து என்பது பணம் அல்ல; நண்பர்களே உண்மையான சொத்து. பவுன்சிங் போர்டு என்பது ஒருவருக்கு ஒருவர் கற்றுக்கொள்ளும் களம் (Peer Learning). ஈரோட்டில் மட்டும் இது போன்ற 100 போர்டுகளை உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு” என்று குறிப்பிட்டார்.

ஜாம்பவான்களின் அனுபவப் பகிர்வு!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2025
நாணயம் விகடன் விருது 2025

தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களைக் கொண்டாடும் நாணயம் விகடன், 9-வது ஆண்டாக நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2025 நிகழ்ச்சியை இன்று (29-ம் தேதி) சென்னையில் வெகு சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக, ‘தமிழகத்தில் ரீடெய்ல் புரட்சி மற்றும் வருங்காலப் பாதை’ (Retail Revolution in Tamil Nadu and the Road Ahead) ஆகிய தலைப்பிலான சிறப்பு விவாத அரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முன்னணி ரீடெய்ல் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். குறிப்பாக, திரு.ஆனந்த பத்மநாபன் (ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்), திரு.ரமேஷ் (போத்தீஸ்), திரு.முருகன் (டார்லிங் எலெக்ட்ரானிக்ஸ்), திரு.சௌந்தர கண்ணன் (நாகா) சார்பாக கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.