`விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு தவெக ஒரு சான்று' – விஜய் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

சேலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரத் தயாராகவுள்ளன. தற்போது அந்தக் கட்சிகள் குறித்து கூற முடியாது. எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அதைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்கள், விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் என திமுக ஆட்சியில் எல்லோரும் போராடி வருகின்றனர். எல்லா துறையிலும் ஊழல் பெருகி உள்ளது. கடந்த தேர்தல் அறிக்கையில் 4-இல் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் மனநிலையாக உள்ளது. திமுக-வுக்கு மாற்று என்றால் அது அதிமுக-தான். இந்த 5 ஆண்டுகளில் போட்டா ஷூட்டுக்காகத்தான் திமுக ஆட்சி நடத்தியுள்ளது. 52 குழுக்களை இதுவரை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அந்தக் குழுக்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. விதிகளை மீறி இந்த நிதி ஆண்டில் சாலைப் பணிக்காக ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா? இல்லையா? என்ற நிலை வந்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி

தவெக தலைவர் விஜய் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. கூட்டம் கூடுவதையெல்லாம் வைத்து ஆட்சி அமைத்துவிட முடியுமா? விஜய் ஒரு சிறந்த நடிகர். அதை மறுக்க முடியாது. ஆனால், சிறந்த அரசியல் கட்சி அதிமுக-தான். திமுக ஆட்சியை எதிர்த்து அவரால் பேசக்கூட முடியவில்லை. கரூரில் அவரது பேச்சைக் கேட்பதற்காக வந்த 41 பேர் உயிரிழந்தனர். அந்த சோக நிகழ்வுக்கு அவர் நேரடியாகச் சென்றாரா? அந்த குடும்பத்தின் நிலையை அவர் யோசித்தாரா? பின்னர் யாருக்காக அவர் கட்சி நடத்துகிறார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் விஜய்

அவரை நம்பி வந்தவர்களுக்காக எதையும் செய்யாமல் திரைப்படத்தில் கிடைக்கும் பல்லாயிரம் கோடியை விட்டுவிட்டு, அரசியலுக்கு வந்துள்ளேன் என்கிறார். யாருக்காக அதை விட்டுவிட்டு விஜய் வந்துள்ளார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழி உள்ளது. அதை விஜய் நிரூபித்துவிட்டார். ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக எதையும் பேசக் கூடாது. இது 8 கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. அரசு நடத்துவதற்கென்று அனுபவம் தேவை. இது திரைப்படம் இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.