கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல. ஒருகாலத்தில் அவை செல்வங்களைச் சேர்த்துவைக்கும் பண்டாரங்கள். கல்வி கற்றுத்தரும் கல்விச் சாலைகள். இயற்கைப் பேரிடர்களின்போது மக்களுக்குப் புகலிடம்.
சில ஆலயங்கள் மருத்துவச் சாலைகளாகவும் விளங்கின. அவற்றை ஆதுரச் சாலைகள் என்று போற்றுகின்றன நம் மரபு சார் நூல்கள். அப்படி ஓர் ஆலயம்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள ‘பழைய சீவரம்’ என்னும் தலத்திலிருந்து பாலாற்றைக் கடந்து மறுபுறம் சென்றால் திருமுக்கூடல் தலத்தை அடையலாம்.
பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு ‘திருமுக்கூடல்’ எனும் திருப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் பெருமாள் நின்றகோலத்தில் திருமலை திருப்பதி வேங்கடேசராகக் காட்சி கொடுக்கிறார்.
பெருமானின் திருவடியில் பூமாதேவியும் மார்க்கண்டேயரும் அமா்ந்து வழிபடுகின்றனா். அப்பன் வேங்கடேசன் சாட்சாத் திருப்பதி பெருமாளேதான். இதுகுறித்து விளக்குகிறது தலபுராணம்.

தலபுராணம்
வேங்கடமலையில் அருளும் எம்பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார் தொண்டைமான் சக்கரவர்த்தி. திருமலை திருப்பதி திருக்கோயிலில் ஏராளமான திருப்பணிகளைச் செய்தவர் இவர்.
ஒருமுறை திருமலையில் நடைபெறும் திருப்பணிகளைப் பார்வையிடச் சென்றார் மன்னர். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, தொண்டை நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை மன்னன், நாட்டை முற்றுகையிட்டுவிட்டான். மன்னர் நாட்டில் இல்லாத நிலையில், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றனர் அமைச்சர்கள்.
தகவல் கேள்விப்பட்ட மன்னன், பெருமாளிடம் சரணடைந்தார். மனமுருகப் பிரார்த்தித்தார். வேங்கடவன், தன் பக்தனைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்டார். தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும், சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாரையும் களம் காணச் செய்து பகைவர்களை விரட்டி, மன்னரையும் நாட்டையும் காப்பாற்றினார்.
திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார். திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து, தன் வேண்டுதலுக்கு இரங்கி, திருவேங்கடமுடையானே பகையரசனை விரட்டிய அற்புதத்தை உணர்ந்தார்.
அப்போதுமுதல் திருமுக்கூடல் திருப்பதிக்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்தில் பக்தியால் பக்தர்கள் அனைவரும் வேங்கடவனைத் தந்தையாகப் பாவித்து வழிபட்டார்கள். அதனால் பல்லவ மன்னரும் திருமுக்கூடல் பெருமானை ‘அப்பன்’ என்று அழைக்க அதுவே அவர் திருப்பெயர் முன் சேர்ந்துகொண்டது.

இத்தலத்தில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை பல்லவர் மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்கிறார்கள். கல்வெட்டுகளிலிருந்து ‘விஷ்ணு படாரா்’, ‘திருமுக்கூடல் ஆழ்வார்’, ‘திருவேங்கடமுடையான்’ மற்றும் ‘ஸ்ரீவெங்கடேசுவர ஸ்வாமி’ எனப் பல திருநாமங்களில் இந்த இறைவன் வணங்கப்பட்டுள்ளதை நம்மால் அறிய முடிகின்றது.
மேலும் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருப்பதி வேங்கடவனே என்பதால் இங்கு வந்து பெருமாளைச் சேவித்தால் திருப்பதி ஏழுமலையானைச் சேவித்த பலன் கிடைக்கும்.
மாட்டுப்பொங்கல் அன்று மகத்தான உற்சவம்
தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று தரிசனம் தரும் ‘பரிவேட்டை’ வைபவம் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சி வரதா், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மா், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும் ஒரே நேரத்தில் பக்தா்களுக்குச் சேவை சாதிப்பா்.
பல ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பஞ்சமூா்த்திகளின் தரிசனத்தை ஒருசேரப் பெற்று மகிழ்வர்.
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்
பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், இங்கு தனிச் சந்நிதியில் அருளும் அனுமனையும் பக்தியோடு வழிபடுகின்றனா். இந்தத் தலத்தில் அனுமன் ‘கா்ணகுண்டலம்’ அணிந்து காட்சி தருகிறார். இங்கு இவருக்கு ‘வடை மாலை’க்குப் பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது.
ஆதுரசாலை
இந்தத் திருக்கோயிலில் சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் கல்லூரி, நடனசாலை மற்றும் மருத்துவமனை இருந்ததை கி.பி.1068-ம் ஆண்டின் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியலாம்.
வீரராஜேந்திர சோழ மன்னன் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, இந்த மருத்துவமனை ‘வீர சோழன் மருத்துவமனை’ என்று அழைக்கப்பட்டதையும், பதினைந்து நபா்கள் இந்த மருத்துவமனையில் தங்கி உள் நோயாளிகளாக (In patient) சிகிச்சை பெறும் வசதியோடு இம்மருத்துவமனை விளங்கியது.

இந்த மருத்துவமனையில் நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவா், அறுவை சிகிச்சை செய்பவா், மருந்து சேகரிப்பவா், பெண் செவிலியா்கள் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விவரம், அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் உணவு குறித்தும் கோயிலின் கிழக்குப் பிராகாரத்தில் இருக்கும் மிக நீண்ட கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கோயிலின் ஒரு பகுதியான ‘ஜனநாத மண்டபம்’ என்னும் இடத்தில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்திருக்கிறது.
வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை காஞ்சிபுரம் அருகே இருக்கும் திருமுக்கூடல் சென்று பெருமாளை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் திருப்பம் நிச்சயம் ஏற்படும்.