சென்னை அடையாறு காந்தி நகரில் இயங்கி வருகிறது குமார ராணி முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி. பனிரெண்டாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளியில் சில தினங்களுக்கு முன் அனைத்து பெற்றோரையும் நேரில் வரச் சொல்லியிருக்கிறது நிர்வாகம்.
அதன்படி இன்று காலை பள்ளிக்குச் சென்ற அவர்களிடம், `நாங்கள் பள்ளிக் கட்டடத்தை இடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே உங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார்களாம்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், `முழு ஆண்டு பரிட்சை எழுத இருக்கிற இந்த நேரத்தில் என்ன இப்படிச் சொல்கிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் நிர்வாகம் முதலில் சொன்ன அதையே திரும்பவும் சொல்லிவிட்டு நிர்வாகத்தின் முடிவு எனச் சொல்லி விட்டார்ர்களாம்.
வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் தற்போது பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பள்ளித் தரப்பை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது,
’நான் இங்க புதுசா சேர்ந்திருக்கிற ஆசிரியை. எனக்கு இந்த விவகாரம் முழுசா தெரியல. மேனேஜ்மென்ட் முடிவுனு சொல்றாங்க. நீங்க வைஸ் பிரின்சிபல் கிட்டப் பேசுங்க’ என இன்னொருவரிடம் போனைக் கொடுத்தார் எதிர்முனையில் பேசியவரோ, ’இது பத்தி இப்ப எதுவும் பேச முடியாதுங்க. பெற்றோர்கிட்ட நாங்க பேசிட்டிருக்கோம்’ என முடித்துக் கொண்டார்.

பெயர் குறிப்பிட விரும்பாத பள்ளியுடன் தொடர்புடைய ஒருவர் நம்மிடம் பேசிய போது, ‘பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இந்தக் கட்டடத்தில் பள்ளி இயங்கத் தடை போட்டதா தெரியவருது. அதேநேரம் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாதுகாப்பான மற்ற சில பிளாக்ல அனுமதிக்கப் படலாம்னு சொல்றாங்க’ என்றார்.

பெற்றோர் ஒருவரிடம் நாம் கேட்ட போது, ‘கட்டடம் தரம் இல்லாததா இருந்தா அதை எப்ப ஆய்வு செய்யணும். கல்வி ஆண்டின் தொடக்கத்துல பார்த்திருக்க வேண்டாமா? கட்டணம் கட்ட தாமதாமா அவ்வளவு கடுமை காட்டுறவங்க இந்த விஷயத்துல கவனமா இருக்க வேண்டாமா? அதேபோல இப்ப 9 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் மட்டும் படிக்கலாம்னா அவங்க பாதுக்காப்பு குறித்து பெற்றோருக்கு அச்சம் வராதா’ என ஆவேசமாகக் கூறுகிறார்.
தேர்வு நேரம் என்பதால் எந்த பள்ளி இந்த மாணவர்களைச் சேர்க்கும் என்பதும் தெரியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு நல்ல தீர்வை காண எடுக்க முன்வர வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.