திமுக – காங்கிரஸ் பஞ்சாயாத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி – என்னதான் நடக்கிறது அங்கே?

திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது.

இருதரப்பினரும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒரு கூட்டத்தில் எம்.எல்.ஏ கோ.தளபதி காங்கிரஸின் மாணிக்கம் தாகூரையும், ஜோதிமணியையும் கன்னாபின்னாவென பேசியிருந்தார்.

திமுக எம்எல்ஏ கோ. தளபதி
திமுக எம்எல்ஏ கோ. தளபதி

மதுரை வடக்குத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்?

பதிலுக்கு ‘காங்கிரஸுக்கும் தன்மானம் இருக்கிறது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டுமென கார்கேவிடமே பேசுவேன்’ என மாணிக்கம் தாகூர் கொந்தளித்திருக்கிறார்.

திமுக – காங் மோதலால் மதுரை வடக்கு தொகுதியில் அனல் பறக்கிறது. மதுரை வடக்கில் என்ன நடந்தது? அந்தத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்?

‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ்

மதுரையில் கடந்த 25 ஆம் தேதி திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்டச் செயலாளரும், வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸை விமர்சித்துப் பேசியிருந்தார்.

அதாவது, “காங்கிரஸைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எல்லாம் எம்.பி ஆகிவிட்டனர்.

இனி மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆனால் என்ன ஆகவில்லை என்றால் என்ன என்று சொல்லி அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

திமுக எம்எல்ஏ கோ. தளபதி
திமுக எம்எல்ஏ கோ. தளபதி

இதையெல்லாம் தலைமை புரிந்துகொண்டு அடுத்து இவர்களுக்கு எல்லாம் சீட் கொடுக்கவே கூடாது. நாம் இல்லையென்றால் இந்திய கூட்டணியே கிடையாது.

ஒரு தொகுதிக்கு 2 ஆயிரம் 3 ஆயிரம் ஓட்டுகள் தான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ்.

அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.

Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது!

இதற்கு பதிலளிக்கும் வகையில் எம்.பி மாணிக்கம் தாக்கூர், “ இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.

தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது. Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது என்று” பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

திமுக எம்எல்ஏ-வின் கருத்திற்கு காங் எம்.பி. ஜோதிமணி, தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதாகவும் கைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறிக் காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது.

இப்படி மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதியைப் பெறுவதில் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் உண்மையில் மதுரை வடக்குத் தொகுதியின் நிலவரம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

மதுரை வடக்குத் தொகுதி

2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் உருவானதுதான் இந்த மதுரை வடக்குத் தொகுதி.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி மியூசியம், உலகத் தமிழ்ச்சங்கம், அரசு சட்டக்கல்லூரி, மாவட்ட நீதிமன்றம் என மதுரையின் முக்கிய அடையாளங்கள் மதுரையின் வடக்குத் தொகுதியில் தான் அமைந்திருக்கின்றன.

2011, 2016, 2021 என மூன்று முறை இந்தத் தொகுதி சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கிறது.

அதிமுக - ஏ.கே போஸ்
அதிமுக – ஏ.கே போஸ்

2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே. போஸ் 1,12,691 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ராஜேந்திரனைத் தோற்கடித்திருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.வி. ராஜன் செல்லப்பா 70,460 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி. கார்த்திகேயனைத் தோற்கடித்திருக்கிறார்.

இரண்டு முறை வென்ற அதிமுக

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கோ. தளபதி 73,010 வாக்குகளைப் பெற்று பாஜக சார்பில் போட்டியிட்ட பி.சரவணனை தோற்கடித்திருக்கிறார்.

ஆக, மதுரை வடக்குத்தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு முறை அதிமுகவே இந்தத் தொகுதியில் வெற்றிப்பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

காங்கிரஸின் தோல்வி

இரண்டு முறை போட்டியிட்டிருக்கும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்திருக்கிறது. ஒருமுறை திமுக வென்றிருக்கிறது.

2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.ராஜேந்திரன் மாணிக்கம் தாகூரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய மாமனாருக்காகத் தான் மதுரை வடக்குத் தொகுதியை முன்வைத்து மாணிக்கம் தாகூர் கலகம் செய்கிறார் என உடன்பிறப்புகள் கொதிக்கின்றனர்.

தொகுதியைத் தக்கவைப்பதில் உள்ளூர் திமுக தரப்பிலும் மிகவும் உறுதியாகவே இருக்கிறார்கள். ஆனால் மதுரை வடக்கு தொகுதியைப் போலவே தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளில் திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவிக் கொண்டிருப்பது ஊர் அறிந்ததே! எனவே கட்சிகளின் தொகுதி டக் ஆஃப் வாரின் முடிவிலேயே… எந்தெந்த தொகுதிகள் கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு என்பது வெட்டவெளிச்சமாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.