`விசுவாசத்தின் விலை துரோகமா?' – ஜி ஜின்பிங்கின் 'நிழல்' ஜாங் யூக்ஸியா வீழ்ந்தது எப்படி?

வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்தே தொடங்குகிறது.

நம்பிக்கை ‘போர் வீரனாக’…

1950-ல் ஒரு செல்வாக்கு மிக்க ராணுவக் குடும்பத்தில் பிறந்த ஜாங்கிற்கு, அதிகாரம் என்பது பிறப்பிலேயே கொடுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இவரது தந்தை ஜாங் ஜாங்ஸுன், மாவோவின் நம்பிக்கைக்குரிய தளபதி. அதே காலகட்டத்தில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங்கின் தந்தையும் அதே ராணுவப் பிரிவில் பணியாற்றியவர்.

ஒரு சாதாரண வீரராக ராணுவத்தில் சேர்ந்த ஜாங், வெறும் வாரிசுப் பெருமையால் மட்டும் உயரவில்லை; 1979-ல் வியட்நாம் போர்க்களத்தில் அவர் சிந்திய ரத்தமும், காட்டிய வீரமுமே அவரை ஒரு நிஜமான ‘போர் வீரனாக’ ராணுவத்தின் முன்னணியில் நிறுத்தியது.

ராணுவ பதவி – விசுவாசத்தின் அடையாளம்

2012-ஆம் ஆண்டு சீன அரசியலில் ஒரு திருப்புமுனை. ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராகப் பொறுப்பேற்றபோது, ராணுவத்தைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடித்தார். அதற்கு அவருக்கு ஒரு நம்பிக்கையான போர் வீரன் தேவைப்பட்டான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தவர் ஜாங் யூக்ஸியா. ஜாங்கின் மீது ஜி ஜின்பிங் கொண்ட அபார நம்பிக்கையினால், அவர் மத்திய ராணுவ ஆணையத்தின் (CMC) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இது ராணுவத்தில் அதிபருக்கு அடுத்தபடியாக ஒருவருக்குக் கிடைக்கும் மிக உயரிய பதவி. சீனாவின் அணு ஆயுதப் பிரிவை (Rocket Force) நவீனப்படுத்துவது முதல், அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது வரை அனைத்து ரகசியப் பொறுப்புகளும் ஜாங்கிடமே ஒப்படைக்கப்பட்டன. ராணுவ விதிகளின்படி 72 வயதில் ஓய்வு பெற வேண்டிய ஜாங்கிற்கு, ஜி ஜின்பிங் விதியைத் தளர்த்தி 75 வயது வரை பதவி நீட்டிப்பு வழங்கினார். அந்த அளவிற்கு அவர் விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டார்.

அணு ஆயுத தகவல் கசிவு

ஆனால், 2026-ன் தொடக்கத்தில் சீனாவின் மிக ரகசியமான அணு ஆயுத ஏவுகணைகள் மற்றும் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. அமெரிக்க உளவு அமைப்பான CIA-விற்கு இந்தத் தகவல்கள் பரிமாறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தத் தகவல்கள் ஜாங் யூக்ஸியாவின் நேரடி மேற்பார்வையில் இருந்த ‘ஆயுத மேம்பாட்டுத் துறையிலிருந்து’ கசிந்தவை என்பது உறுதி செய்யப்பட்டபோது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட தரவுகளின்படி, பல ஆண்டுகளாக ராணுவ ரகசியங்கள் கைமாறியதன் பின்னணியில் ஒரு பெரும் சதி வலை இருப்பது தெரியவந்தது.

ஊழல், தேசத்துரோகம், அதிகார துஷ்பிரயோகம்

படிப்படியாக உயர்ந்த ஜாங்கின் அதிகாரம், ஒரே ஒரு வாரத்தில் சரிந்து விழுந்தது. ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் நிகழ்ந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார்கள் ஒருபுறமிருக்க, ராணுவத்திற்குள் ஜி ஜின்பிங்கின் அதிகாரத்திற்குச் சவால் விடும் வகையில் ஜாங் ஒரு தனி “அரசியல் குழுவை” உருவாக்கியது விசாரணையில் அம்பலமானது.

ஊழல், தேசத்துரோகம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய மும்முனைத் தாக்குதலுக்கு ஜாங் உள்ளானார். நேற்றுவரை அதிபருடன் ஒரே மேடையில் அமர்ந்து ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டவர், இன்று கைதியாக விசாரணை அறையில் அமர வைக்கப்பட்டார். இது ஒரு தனிமனிதனின் வீழ்ச்சி என்பதைத் தாண்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசனனையாக ஆனது.

ஜாங்கின் இந்த வீழ்ச்சி, ஜி ஜின்பிங்கின் அதிகாரப் பிடியை இன்னும் பலப்படுத்தியுள்ளதோடு, ராணுவத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் நம்பிக்கையாகத் தொடங்கி, இன்று ஒரு வரலாற்றுச் சுவடாக மறைந்துபோன ஜாங் யூக்ஸியாவின் கதை, அதிகாரத்தின் இருண்ட பக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.