மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் உருவாகியிருக்கும் படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முன்னணி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “நடிகர் ஜீவாவை எனக்கு அவர் குழந்தையாக இருந்தபோதே தெரியும். எனது இரண்டாவது படத்தில் அவர் கிருஷ்ணர் வேடம் போட்டு நடித்தார். இன்று அவரது மகனைப் பார்க்கும்போது, அவர் ஜீவாவை விட உயரமாக வளர்ந்திருப்பதைப் பார்த்து வியந்துபோனேன்.

ஜீவாவுக்கு இது ஒரு சிறப்பான ‘செகண்ட் இன்னிங்ஸ்’. அவர் பெரிய வெற்றிகளைப் பெறுவார். இந்தப் படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் கண்ணன் அழைத்தபோது மரியாதை நிமித்தமாகவே சென்றேன். ஆனால், படம் தொடங்கியதும், கதை நகர்ந்ததும் தெரியவில்லை. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக படம் விறுவிறுப்பாகச் சென்றது. இப்போதைய டிரெண்டிற்கு ஏற்ப ஒரு சிறிய கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக இயக்குநர் நிஷாந்த் மாற்றியுள்ளார். அவரது உழைப்பு பாராட்டுக்குரியது.
துபாயில் நான் தங்கியிருந்தபோது தயாரிப்பாளர் கண்ணன் காட்டிய விருந்தோம்பல் மறக்க முடியாதது. ஒரு மதிய உணவிற்கு அழைத்தார், அங்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் இருந்தன. தமிழர்களுக்கே உரிய விருந்தோம்பலில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அவர் இப்போது தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநரும் பெப்சி (FEFSI) தலைவருமான ஆர்.கே. செல்வமணி, “இன்று பல தயாரிப்பாளர்கள் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை நம்பியே படம் எடுக்கிறார்கள். ஆனால், கண்ணன் ரவி ‘கதையைக் கேட்டு, அது பிடித்திருந்தால் மட்டுமே படம் பண்ணுவேன்’ என்று சொல்வது ஆரோக்கியமான விஷயம்.
ஆர்.பி. சவுத்ரி சார் 50 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது போல, கண்ணன் ரவியும் பல கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். சிறை, TTT போன்ற சிறிய படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாத காலத்திலும் வசூலில் சாதனை படைப்பது நல்ல தொடக்கம். நமது படத்தின் ரிலீஸ் தேதியை மும்பையிலோ அல்லது அமெரிக்காவிலோ இருப்பவர்கள் முடிவு செய்யும் சூழல் வரக்கூடாது.
100 ரூபாய் பட்ஜெட் படத்திற்கு 500 ரூபாய் செலவு செய்துவிட்டு, பிறகு ஓடிடி நிறுவனங்களுக்காகக் காத்திருப்பது தவறு. திரையரங்க வசூலை மட்டுமே நம்பி படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கண்டென்ட் வெளிவரும். தமிழ் கலாச்சாரமும் மொழியும் தெரிந்த தயாரிப்பாளர்கள் இருந்தால் மட்டுமே தமிழ் சினிமா வளரும். ஜீவா வழக்கமான டூயட், ஹீரோயின் என இல்லாமல் கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்திருப்பதே பாராட்டுக்குரியது. இயக்குநர் நிஷாந்த் ஒரு சிறிய கதையை நேர்த்தியாகக் கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது” எனக் குறிப்பிட்டார்.