பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க விரைந்து செயல்படாத தீயணைப்பு அதிகாரிகள் இடமாற்றம்

திருவனந்தபுரம்:

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள குரும்பாச்சி மலைக்கு சென்ற வாலிபர் பாபு கால் இடறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கி கொண்டார்.

கடந்த 7-ந் தேதி பாறை இடுக்கில் சிக்கி கொண்ட பாபுவை 2 நாட்களுக்கு பிறகு ராணுவத்தினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர்.

இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மீட்பு பணிக்கு மட்டும் ரூ. 75 லட்சம் செலவானதாக கூறப்பட்டது.

இதற்கிடையே 7-ந் தேதி மதியம் பாபு, பாறை இடுக்கில் சிக்கி கொண்டதும், அவரது நண்பர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டபோது இரவாகி விட்டது.

இதனால் பாபுவை உடனடியாக மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டிருந்தால் பாபுவை உடனடியாக மீட்டிருக்கலாம் என பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

இதுபற்றி தீயணைப்பு துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர் குறித்த தகவலை உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காதது, விரைந்து செயல்படாதது மற்றும் உரிய உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு செல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தீஜ் உள்பட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.