கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவனை கண்டித்து, தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தில் இருக்கும் 12 ஊராட்சிகளை கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, மக்களின் கோரிக்கையை ஏற்று உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகாவுடன் இணைக்கப்பட்டது.
இதையடுத்து உள்ளாட்சி, மின்சாரம் மற்றும் தொடக்கக் கல்வியை தவிர மற்ற அனைத்து அரசு துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உள்ளாட்சி, மின்சாரம் மற்றும் தொடக்கக் கல்வி உள்ளிட்ட 3 துறைகளையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இளையரசனேந்தல் குறு வட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பிரித்து, தென்காசி மாவட்டத்துடன் இணைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்துடன் அனைத்து துறைகளையும் இணைக்க வேண்டும் என்று 14 ஆண்டுகளாக தாங்கள் போராடி வரும் நிலையில், தங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளமால் தென்காசி மாவட்டத்துடன் இணைக்க முயற்சி செய்வது கண்டிதக்கது என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பழைய அப்பனேரி கிராமத்தில் உள்ள சமுதாய திருமண மண்டபத்தில் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இளையரசனேந்தல் குறு வட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்க வேண்டும், அனைத்து துறைகளையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும், இதற்கான அறிவிப்பினை வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும்,
இளையரசனேந்தல் குறுவட்டத்தினை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று சட்டமன்ற அரசு அலுவல் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் வைத்த கோரிக்கை மனுவை நிரகரிக்க வேண்டும், கோவில்பட்டி வளர்ச்சிக்கு விரோதமாக செயல்படும் அமைச்சர் கீதாஜீவன் மாற்றாந்தாய் மனநிலையை கைவிட்டு கோவில்பட்டி வளர்ச்சிக்கு உதவ வேண்டும், இல்லையென்றால் சாலைமறியல், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து கோவில்பட்டி வளர்ச்சிக்கு எதிராக அமைச்சர் கீதாஜீவன் செயல்பட்டு வருவதாகவும், அவரைன கண்டித்தும், தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது. அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM