மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.

இதையும் படிக்கலாம்…
இந்த வார விசேஷங்கள்: 5.04.22 முதல் 11.04.22 வரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.