டெல்லியில் உள்ள முகமதுபூர் கிராமம் தற்போது மாதவ்புரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, மண்டலக் குழுவில் முகமதுபூர் பெயரை மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் பா.ஜ.க கவுன்சிலர் பகத் சிங் தோகாஸ், “கிராம மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு, டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா செய்தியாளர் சந்திப்பின் போது, “முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம், முகமதுபூர் என்ற கிராமத்தின் பெயரை மாதவ்புரம் எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான கோப்புகளை எம்.சி.டி-யின் தலைமை நகரத் திட்டமிடுபவர் அனுப்பினார்.
இந்த நிலையில், முகமதுபூர் கிராமத்தை மறுபெயரிடுவதற்கான செயல்முறை இன்று நிறைவடைந்துள்ளது. இனிமேல், இந்த கிராமம் முகமதுபூர் என்பதற்குப் பதிலாக, `மாதவ்புரம்’ என அழைக்கப்படும். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், அடிமைத்தனத்தின் எந்தச் சின்னமும் நம் நாட்டில் இருக்கக்கூடாது, அதை எந்த டெல்லி வாழ் மக்களும் விரும்பவில்லை.

ஆரம்பத்தில் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டபோது, முகமதுபூரை மாதவ்புரம் என ஏன் பெயர் மாற்ற வேண்டும் என்று எனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன. அந்த மிரட்டலுக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.