லக்னோ-உத்தர பிரதேசத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து, 6,000 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த வாரம், மாநில போலீஸ் அதிகாரிகளுடன், சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். பின், அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.இந்நிலையில், முதல்வர் உத்தரவின்படி, மாநிலம் முழுதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில், ஒலிபெருக்கிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.இதுவரையிலும், 6,000க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாநில சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறியதாவது:மாநிலத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து, 6,031 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. ‘மைக்’குகள் பயன்படுத்த தடை இல்லை; எனினும், வளாகத்திற்கு வெளியே சத்தம் கேட்காமல் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். இதனால், மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement