வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு-அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ”அரசியல் பேதங்களை ஒதுக்கிவைத்து, நாட்டின் நலனுக்காக ஒன்று சேர வேண்டும்,” என, எதிர்க்கட்சிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
![]() |
நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
![]() |
இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகக் கோரி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்கங்கள் சமீபத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.’பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேயை நீக்காவிட்டால், மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும்’ என, புத்த மதத் தலைவர்கள் எச்சரித்திருந்தனர்
.இதற்கிடையே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இவ்வாறு இலங்கை அரசுக்கு எதிராக பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த சூழ்நிலையில் கூட்டணி அமைக்க வரும்படி அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார். அவர் கூறியுள்ளதாவது:சர்வதேச உழைப்பாளர்தினத்தில் மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
அரசியல் பேதங்களை ஒதுக்கிவைத்து மக்களுக்கு பணி ஆற்றுவோம்.பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement