ஆசிட் வீசிய நபர் எங்கே?| Dinamalar

பெங்களூரு : இளம்பெண் மீது, ‘ஆசிட்’ வீசி தப்பி ஓடியவரின் பெற்றோர், சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெங்களூரு சுங்கதகட்டேயை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை நாகேஷ், 28 என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்தார். ஒரு ஆண்டாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்து வந்தார். அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி, அப்பெண் மீது ஆசிட் வீசி விட்டு நாகேஷ் தப்பி சென்றார். இதில் அந்த பெண் 50 சதவீதம் காயங்களுடன் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில், ஆசிட் வீசியவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆசிட் வீச்சுக்கு பின் நாகேஷின் பெற்றோர், அண்ணன் குடும்பத்தினர் தப்பி சென்றிருந்தனர். அவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான நாகேஷ், நீதிமன்றம் மூலம் சரணடைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

எனவே, அவர் சரணடையதற்கு முன்பே கைது செய்ய, போலீசார் நீதிமன்றத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது, அது ஏழாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு இன்று முதல் தோல் பொருத்தும் சிகிச்சை நடக்கிறது.

இதற்காக, விக்டோரியா மருத்துவனையில் இருந்து தோல், செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தோல் பொருத்தியவுடன் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் அது வளர ஆரம்பித்து விடும். அதன்பிறகு எரிச்சல், வலி குறையும். பழைய சருமத்தை போலவே வளரும். உடல் பழைய நிலைக்கு திரும்பும்.’தானம் பெறப்பட்டு சோதனை செய்த பின்தான் இந்த தோல் பொருத்தப்படுகிறது. இதனால் எந்த தொந்தரவும் ஏற்படாது’ என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.