சித்ரகூட்: உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்ட மருத்துவமனையை சித்ரகூட் பிரிவின் பாஜக பொறுப்பாளரும், மாநில சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சருமான ஜெய்வீர் சிங் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சர் மருத்துவமனையை ஆய்வு செய்து கொண்டிருந்த போது, சித்ரகூட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பூபேஷ் திரிபாதி, வார்டில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் சடலத்தை பரிசோதித்தது மட்டுமல்லாமல், அமைச்சர் மூலம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு பழங்களையும் கொடுத்தார். இவரது செயலை கண்ட சித்ரகூட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான மீராபாரதி, மருத்துவர்களின் வெட்கக்கேடான செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக அப்போதே, சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளிடம் விசாரித்தார். முதலில் இறந்த பெண்ணை பரிசோதிக்கவில்லை என்று தெரிவித்த அவர்கள், பின்னர் ஒத்துக் கொண்டனர். அதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கலெக்டர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.
