சென்னை: முதியோருக்கு வழங்கப்படும் ரயில் பயண கட்டணத்தில் 50 சதவீத சலுகை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகையால் அவர்கள் பெரும்பயனடைந்தார்கள். ஆனால், கரோனா காலத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட அசாதாரண சூழல், பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் ரயில்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை, இருக்கைகள், கட்டணம் ஆகியவற்றில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
தற்போது கரோனா வெகுவாக குறைந்து விட்டதால் ஏற்கெனவே ரயில்வேயில் நடைமுறையில் இருந்த அனைத்து சேவைகளும் மீண்டும் தொடர வேண்டும் என்பதுதான் ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான 50 சதவீத கட்டண சலுகையை மீண்டும் வழங்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது, ரயில் பயணத்தை பெரும்பாலும் எதிர்நோக்கி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு பயன்தராது.
எனவே, சாதாரண மூத்த குடிமக்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு ரயில் பயணத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட 50 சதவீத கட்டண சலுகையை மீண்டும் வழங்க ரயில்வே அமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.