உலகிலேயே விலை உயர்ந்த கார்: ரூ. 1,100 கோடிக்கு ஏலம் போன மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர்

நியூயார்க்: உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த காராக மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் மாடல் கருதப்படுகிறது. 1955-ம் ஆண்டில் வெளிவந்த இந்த ஸ்போர்ட்ஸ் கார் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் 14.30 கோடி டாலருக்கு (ரூ. 1,100 கோடி) ஏலம் போனது.

பழைய கார்களில் மிக அதிக விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட காராக இது கருதப்படுகிறது.

1955-ம் ஆண்டில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் ரேசிங் பிரிவு உருவாக்கிய இரண்டு கார்களில் இது ஒன்றாகும். தலைமைப் பொறியாளர் ருடோல்ப் உஹ்லென்ஹாட் என்பவரின் தலைமையிலான குழுவால் இது வடிவமைக்கப்பட்டது.

300 எஸ்எல்ஆர் மாடல் காரான இது இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. ஜூவான் மானு வல் பான்ஜியோ என்பவர் இந்தக் காரை ஓட்டி பட்டம் வென்றுள்ளார். மிகவும் திறன் வாய்ந்த 3 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. அந்த காலகட்டத்தில் மணிக்கு 289.68 கி.மீ. வேகத்தில் விரைந்த இந்தக் கார்தான் அதி விரைவு காராக இருந்தது.

கனடாவில் உள்ள பழைய கார்களை ஏலம் விடும் ஆர்எம் சோத்பி நிறுவனம் மே 5-ம் தேதி இந்தக் காரை மெர்சிடஸ் பென்ஸ் ஸ்டட்கார்ட் அருங்காட்சியகத்தில் ஏலம் விட்டது. இந்த காரை ஏலம் விட்டதன் மூலம் பெறப்பட்ட தொகை மெர்சிடஸ் பென்ஸ் நிதியத்துக்கு சென்று சேரும். இந்த நிதியம் மூலம் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு உதவி செய்யப்படுகிறது.

இந்தக் காரை ஏலம் எடுத்தவர் முக்கியமான நாள்களில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.