புதுடெல்லி: பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து ஆய்வு செய்யும் தொழில்நுட்ப குழு, அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட 50,000 பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு ஜூலையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தியாவில் 40 செய்தியாளர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட 30 பேரின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி அமர்வு விசாரித்து வருகிறது. இந்திய செய்தியாளர்கள், அரசியல் தலைவர்களின் ஸ்மார்ட் போன்கள் உளவு பார்க்கப்பட்டதா என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்த குழுவில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோக் ஜோஷி, சர்வதேச எலக்ட்ரோ-டெக்னிக்கல் ஆணைய தலைவர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நிபுணர் குழுவுக்கு உதவுவதற்காக 3 பேர் கொண்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குஜராத்தின் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவின் அமிர்த விஸ்வா வித்யா பீடத்தின் பேராசிரியர் பிரபாகரன், மும்பை ஐஐடி பேராசிரியர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
29 செல்போன்கள் ஆய்வு
இந்த பின்னணியில் பெகாசஸ் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொழில்நுட்ப குழுவின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ‘‘பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டோரின் ஸ்மார்ட் போன்களை ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை 29 ஸ்மார்ட் போன்களை ஆய்வு செய்திருக்கிறோம். எங்களுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் தேவை’’ என்று கோரப்பட்டது.
4 வாரங்களுக்குள்..
இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஏற்றுக் கொண்டார். அவர் கூறும்போது, தொழில்நுட்ப குழு தனது அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழுவிடம் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை நீதிபதி ரவீந்திரன் குழு 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து அவர்களது கருத்துகளை இணைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
நிபுணர் குழுவின் அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரினார். இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலையில் நடைபெற உள்ளது.