வட மாநிலங்களில் சமீப காலமாக திருமண நிகழ்ச்சிக்கு வரும் மணமகள்கள் வித்தியாசமான முறையில் வருவது புதிய நாகரீகமாக மாறி உள்ளது.
கடந்த மாதம் அரியானாவில் ஒரு மணமகள் குதிரையில் ஏறி திருமண மண்டபத்துக்கு வந்தார். அவர் கையில் வாளை ஏந்தியபடி சுழற்றி கொண்டு வந்தது திருமண விழாவுக்கு வந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.
அதேபோன்று வித்தியாசமான முறையில் பெண்கள் யோசித்து திருமண விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். நேற்று மத்திய பிரதேசத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.
அந்த மாநிலத்தின் பெதுல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மணமகள் வித்தியாசமான முறையில் மணமேடைக்கு வர ஆசைப்பட்டார். காரில் திருமண மண்டபத்திற்கு செல்லலாம் என்று அந்த பெண்ணின் பெற்றோர் சொன்னதை அவர் ஏற்கவில்லை.
அதற்கு பதில் டிராக்டர் ஓட்டி கொண்டு திருமண மண்டபத்திற்கு வருவதற்கு அந்த பெண் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து வாடகைக்கு டிராக்டர் கொண்டு வரப்பட்டது. அந்த பெண் மணமகளுக்கு உரிய அலங்காரம் அனைத்தையும் செய்த பிறகு கருப்பு கண்ணாடி அணிந்தபடி டிராக்டர் ஓட்டிக்கொண்டு திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.
வழிநெடுக அவருக்கு அவரது உறவினர்கள் வரவேற்பு கொடுத்தனர். மணமகள் டிராக்டர் ஓட்டி வந்த காட்சி மத்திய பிரதேசத்தில் சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.