தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் வெளியான நுபுர் ஷர்மாவின் சர்ச்சையான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தின் பிரக்யராஜில் நடைபெற்ற போராட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜாவேத் முகமது என்பவரை அந்த மாநில போலீஸார் கைதுசெய்தனர். அத்துடன் அவரின் வீடும் புல்டோசரால் இடிக்கப்பட்டது. ஜாவேத் முகமது முறையாக அனுமதி பெறாமல் வீடு கட்டியதால், வீடு இடித்துத் தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால், அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் தங்கள் வீட்டை இடித்து விட்டதாக ஜாவேத் முகமதின் மகள் அஃப்ரின் பாத்திமா குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இடிக்கப்பட்ட அந்த வீடு ஜாவேத் முகமதின் பெயரில் இல்லையென்றும், தன் பெயரில் இருக்கும் அந்த வீட்டுக்கு ஆவணங்கள் அனைத்தும் முறையாக இருப்பதாகவும் அவரின் மனைவி குற்றம்சாட்டினார்.
Jail authorities and district administration have denied presence of my father, Janab Javed Muhammad, in the Naini Central Jail where he was kept following his arrest. We are concerned about his safety and health! pic.twitter.com/C9bIfsRuQY
— Afreen Fatima (@AfreenFatima136) June 20, 2022
ஜாவேத் முகமதின் வீட்டைப் போலவே போராட்டத்தில் ஈடுபட்ட இன்னும் இரண்டு பேரின் வீடுகளை அதிகாரிகள் இடித்துத் தள்ளினார்கள். இந்த நடவடிக்கை தொடரும் எனவும் உ.பி முதல்வர் யோகி எச்சரித்திருந்தார்.

அதையடுத்து ஜாவேத் முகமதின் மகள் அஃப்ரின் பாத்திமாவுக்கு ஆதரவாக #StandWithAfreenFathima என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில், அஃப்ரின் பாத்திமா தனது ட்விட்டர் பக்கத்தில்… ஜாவேதின் மனைவி பர்வீர் பாத்திமா எழுதியிருக்கும் கடிதத்தைப் பகிர்ந்து, “என் தந்தை கைதுசெய்யப்பட்டவுடன் நைனி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தற்போது, என் தந்தை ஜாவேத் முகமது சிறையில் இருப்பதை உறுதிப்படுத்த சிறைத்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். அதனால், அவரின் உடல்நிலை குறித்தும், பாதுகாப்பு குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.