இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபய கப்பலில் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி நிலை என இலங்கையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் சீனா, அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13-ம் தேதி பதவி விலகுவார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஒரு ‘தீவிரமான’ விவகாரம். இந்திய அரசு இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது. அண்டை நாடான இலங்கை பாதிப்புக்குள்ளாகும் போதெல்லாம் இந்தியா அக்கறையுடன் செயல்படும்.
இப்போது இலங்கை மக்கள் தங்களின் சொந்தப் பிரச்னைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு கிடையாது. இந்த ஆண்டு மட்டும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது” என்றார்.