இஸ்லாம் மார்க்கத்தின் முக்கியமான கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம். அதன்படி இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும். எனவே ஒவ்வொரு வருடமும் ஏராளமாக இஸ்லாமியர்கள் மெக்கா செல்வது வழக்கம்.
அப்படி செல்பவர்கள் பெரும்பாலும் விமானம் அல்லது வாகனங்கள் மூலமாக செல்வார்கள். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் 10 மாதம், 25 நாட்கள் 6,500கிமீ நடைப்பயணமாகவே ஹஜ் பயணம் மேற்கொண்டு மெக்கா சென்றடைந்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான ஆதம் முகம்மது என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள வால்வர் ஹாம்ப்டனில் இருந்து தனது மெக்கா செல்லும் ஹஜ் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இவர், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்டான் வழியாக நடைபயணம் சென்று சவூதியை அடைந்து தற்போது மெக்கா சென்றடைந்துள்ளார்.

இது பற்றி இணையதளம் பக்கம் ஒன்றில் எழுதிய அவர், “ஹஜ் யாத்திரை இறைவனுக்காக… ஆனால் நடைபயணம் செல்லவேண்டும் என்பதை வெறும் புகழுக்காகவோ, பணத்துக்காகவோ செய்யவில்லை. நம் இனம், நிறம், மதம் எதுவாக இருந்தாலும் மனிதர்களாகிய நாம் அனைவரும் சமம் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கவும், இஸ்லாம் கற்றுத்தரும் அமைதி மற்றும் ஒற்றுமையின் செய்தியைப் பரப்பவும் மட்டுமே இதை நான் செய்தேன்” என்று கூறினார்.