தஞ்சையில் கனமழை.. ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

தஞ்சையில் 2 நாட்கள் பெய்த கனமழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகி உள்ளது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த திடீர் மழையினால் பல இடங்களில் இளம் பயிர்கள் தண்ணீரால் சூழ்ந்துள்ள நிலையில் நெல் மூட்டைகளும் சேதமடைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் முன்னைப் பட்டியில் அமைந்துள்ள நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் திறந்தவெளி சேமிப்புக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மூட்டைகளில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்துள்ளது. சிதறிக்கிடந்த நெல் மணிகள் இரண்டு நாட்களாக மழையில் நனைந்தே காணப்படுகிறது.
image
திறந்தவெளி சேமிப்புக் கிடங்கையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதை அடுத்து நெல் மூட்டைகளை மாற்றும் பணியை நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் செய்து வருகின்றனர். அவ்வாறு மூட்டைகள் அவசர அவசரமாக லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும்போது ஏராளமான மூட்டைகள் சிதைந்தும் நெல்மணிகள் சிதறியும் வீணாகி உள்ளது. ஒருபுறம் மழையில் நனைந்தும் மறுபுறம் மூட்டைகள் உடைந்தும் சேதமாகி உள்ளது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.
மூட்டைகள் வேறு இடத்திற்கு மாற்றும் பொழுதும் ரயில் நிலையம் கொண்டு செல்லும் பொழுது, இதுபோன்று ஒரு சில மூட்டைகள் சேதம் ஆவது இயல்பு. அதனை பணியாளர்கள் கொண்டு காயவைத்து மீண்டும் மூட்டைகளில் நிரப்பி அரவைக்கு அனுப்புவர் என நுகர்வோர் வாணிபக் கழக மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.