திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிலவுவதால் பள்ளி, விடுதி, திருத்தணி அருகே மாணவியின் கிராமம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. திருத்தணி அடுத்ததெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் மகள் சரளா (17), இந்தப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் பள்ளி விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.
நேற்று காலை விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் சரளா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, தகவலறிந்ததும் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் மப்பேடு போலீஸார் விரைந்து, மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
இதனிடையே, காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி சீபாஸ் கல்யாண், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார், திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவிகள், விடுதி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் டிஐஜி சத்யபிரியா, எஸ்பி சீபாஸ் கல்யாண் கூறியதாவது:
காவல் மற்றும் வருவாய்த் துறையின் முதல்கட்ட விசாரணையில், மாணவி சரளா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், தங்கள் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தேவையற்ற இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மாணவியின் சகோதரர் சரவணன் கூறும்போது, ‘‘சரளா விடுதி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக விடுதி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விடுதிக்கு வந்து பார்த்தால், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக விடுதி நிர்வாகம் மற்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். சரளாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.
இதனிடையே, மாணவியின் உறவினர்களும், தெக்களூர் கிராம மக்களும் பொதட்டூர்பேட்டை – திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 பேருந்துகளை அவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திருத்தணி போலீஸாரும் எம்எல்ஏ சந்திரனும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க பள்ளி மற்றும்விடுதி வளாகத்திலும் தெக்களூர் கிராமம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 700-க்கும்மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.