ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாகக் கடந்த 11-ம் தேதி அ.தி.மு.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வர முயன்ற ஓ.பி.எஸ்-ஸை, அங்கிருந்த இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதன்காரணமாக, அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகிய இரு தரப்பும் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கினார். அதேபோல, கட்சியின் மீதான உரிமையை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, ஓ.பி.எஸ் தரப்பை மேலும் பலவீனமாக்கியது.
அலுவலகத்தின் சாவி கையில் கிடைத்தபோதும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியபோதும், நிம்மதியாக உட்காரக்கூட முடியாமல் திணறிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, டெல்லி தலைமையிடம் ஓ.பி.எஸ் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால், தனக்கு எதிராக எந்த முடிவையும் டெல்லி எடுத்து விடக்கூடாது என்று எடப்பாடி நினைக்கிறார்.

இந்நிலையில், தன்னை சுற்றியிருக்கும் ஆதரவாளர்களுக்கு வருமானவரித்துறையின் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடியைச் சமாளிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவைக் காரணமாகவைத்து டெல்லிக்குப் பறந்த எடப்பாடி, எதிர்பார்த்த எதுவும் நடக்காததால், விரக்தியில் வெறும் கையோடு திரும்பியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதுதொடர்பாக எடப்பாடி தரப்பில் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பதவியேற்றதிலிருந்து பல முனைகளிலிருந்தும் பிரச்னை பறந்து வருகிறது. அமைப்புச் செயலாளர்கள் மாற்றம், புதிய பொறுப்புகள் நியமனம் ஆகியவற்றால், எடப்பாடிக்குச் சிக்கல் அதிகரித்துள்ளது. இதைச் சமாளிக்கத் தங்கமணிக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியிலிருந்து இப்போது ஏகப்பட்ட நெருக்கடிகள் எடப்பாடியின் கழுத்தை நெருக்கியுள்ளது.

இதைச் சமாளிக்க, மோடியையும், அமித்ஷா-வை சந்திக்க ஜனாதிபதி வழியனுப்பு விழாவை காரணமாக வைத்து, தமிழக பா.ஜ.க தலைமையின் துணையோடு டெல்லி சென்றார் எடப்பாடி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், கட்சி தொடர்பாகவும், ரெய்டு தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் பேச முடியவில்லை. எதுவாக இருந்தாலும், அமித்ஷா-விடம் பேசிக் கொள்ளுங்கள் என மோடி கூறியிருக்கிறாராம்.
அதேபோல, எடப்பாடி பேச வருவதைக் காது கொடுத்தே கேட்வில்லை என்கிறார்கள். அமித் ஷா மீட்டிங்க்காக பல மணி நேரம் காத்திருந்தும் சந்திக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் துணையாக வந்த தமிழக பாஜக முக்கியஸ்தரே, எடப்பாடியின் போனை எடுக்கவில்லையாம். இதை கொஞ்சமும் எடப்பாடி எதிர்பார்க்கவில்லை.

குறிப்பாக, டெல்லி தலைமையை பார்க்கத்தான், 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இனி இங்கிருந்தாலும், ஆர்ப்பாட்டத்தையும் முறையாக நடத்த முடியாது என்றுதான், உடனே கிளம்பி இருக்கிறார். அதேபோல, 28-ம் தேதி சென்னை வரும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால், இங்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையில் எடப்பாடி இறங்குவார்” என்றனர்.
ரெய்டு தொடர்பாகப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேரடியாகப் பேசினால், எதிர்க்கட்சியில் கையில் எடுக்கக்கூடும் என்பதால்தான் இந்த சந்திப்பை ஆளும் தரப்பு புறக்கணித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் எடப்பாடியைச் சந்தித்துப் பேசாதது சிக்னலாக பார்த்த பன்னீர் ரொம்பவே குஷியாகி இருக்கிறார். மேலும், தனது தரப்பைப் பலப்படுத்த முழு மூச்சாக வேலை செய்ய இறங்கியிருக்கிறார் பன்னீர்.

குறிப்பாக, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராகப் பன்னீரும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் இருந்த காலகட்டத்தில் கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா முதல் சுமார் 800 பேருக்கு மேல் நீக்கப்பட்டனர். இதில் பாதி பேருக்கும்மேல் பன்னீரின் ஆதரவாளர்கள்தான். அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து புது அறிவிப்பை 24-ம் தேதி வெளியிட்டார். மேலும், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்களாக குப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமித்து தன் பங்குக்கு நெருக்கடி கொடுக்கிறார் ஓ.பி.எஸ்… செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு விழாவை தொடங்கி வைப்பதற்காக மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். அப்போது இருதரப்பையும் ஒன்றாக சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார் என்ற உறுதி செய்யப்படாத தகவலும் வெளியாகி இருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.!