தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே சேர்ந்து நடித்த ‘லிகர்’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டையொட்டி பிரபல இந்தி நிகழ்ச்சியான ‘காஃபி வித் கரண்’-ல் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ‘ப்ரோமோ’வில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரண் ஜோஹர், “நீங்கள் கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள்?” என விஜய் தேவரகொண்டாவிடம் வெளிப்படையாகக் கேட்கிறார். அதற்கு வேண்டாம் என்று விஜய் தேவரகொண்டா சைஸாக நழுவுகிறார். “பப்ளிக் இடத்துல பண்ணிருக்கீங்களா?” எனக் கரண் விடாமல் கேட்க, விஜய் பின்னர் சூசகமாக “காரில்…” என்கிறார்.

இப்போதும் டாபிக்கை மாற்றாமல் “Threesome (மூன்று பேர்) அனுபவம் உண்டா?” என்று கேள்வியை நகர்த்துகிறார் கரண். அதற்கு “இல்லை” என்று விஜய் பதில் கூறுகிறார். “அதற்கான எண்ணம் இருக்கிறதா?” என மீண்டும் கரண் கேட்க, தனக்கு அதில் பிரச்னை இல்லை என்று வெளிப்படையாக விஜய் தேவரகொண்டா பதிலளிக்கிறார்.
இந்த காணொலி வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நெட்டிசன்கள் பலர் இது குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இப்படியொரு ப்ரோமோவைப் பகிர்ந்து கவனம் பெறவேண்டும், வியூஸ் எகிற வேண்டும் என்கிற கீழான எண்ணமே இதில் வெளிப்படுகிறது. இப்படி வியாபார நோக்கத்துக்காக அனைவரும் காணும் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு அந்தரங்கம் பேசுவது தவறு. இது போன்ற செயல்கள் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் மதிப்பை இழக்கச் செய்யுமே தவிரப் பிரபலம் அடையச் செய்யாது” என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
மேலும் சிலர், இந்த ப்ரோமோ இப்படியிருந்தாலும் பேட்டியில் முழுமையாக என்ன பேசியிருக்கிறார், எதற்காகப் பேசியிருக்கிறார் என்பதை அறிந்த பின்னரே இது குறித்து விமர்சனம் செய்ய முடியும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர்.