போர்ட் ஆப் ஸ்பெயின்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் தவான், சுப்மன் கில் அரைசதம் விளாச, பந்துவீச்சில் கலக்கிய சாஹல் 4 விக்கெட் வீழ்த்த, 119 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்திய அணியில் அவேஷ் கான் நீக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா தேர்வானார். விண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப், ராவ்மன் பாவெல், ஷெப்பர்டுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர், கீமோ பால், கார்டி இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவான் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜேசன் ஹோல்டர் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கினார் தவான். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த சுப்மன், ஜெய்டன் சீல்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். ‘பவர்-பிளே’ முடிவில் (முதல் 10 ஓவர்) இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன் எடுத்திருந்தது. ஹோல்டர் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த தவான், ஹைடன் வால்ஷ், கைல் மேயர்ஸ் பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். பொறுப்பாக ஆடிய இவர், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 37வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் அசத்திய சுப்மன், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 113 ரன் எடுத்திருந்த போது வால்ஷ் பந்தில் தவான் (58) அவுட்டானார்.
![]() |
மழை குறுக்கீடு:
இந்திய அணி 24 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. பின் தலா 40 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது. பின் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் (44 ரன்) நம்பிக்கை அளித்தார். சூர்யகுமார் யாதவ்(8 ரன்) ஏமாற்றினார். சுப்மான் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 36 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 225 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. சுப்மன் (98), சாம்சன் (6) அவுட்டாகாமல் இருந்தனர். டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 35 ஓவரில் 257 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சாஹல் சுழல் ஜாலம்:
2வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சிராஜ். அந்த ஓவரின் முதல் பந்தில் மேயர்சை (0) போல்ட் ஆக்கிய அவர், 3வது பந்தில் புரூக்சையும் (0) காலி செய்தார். சற்று நேரம் நிலைத்த சாய் ஹோப் (22 ரன்) சாஹல் பந்தில் ஸ்டெம்பிட் ஆகி வெளியேறினார். கிங் (42 ரன்) அக்சர் பந்திலும், கேப்டன் பூரன் (42 ரன்) பிரசித் பந்திலும் நடையை கட்டினர். டெயில் எண்டர்களை சாஹல் வரிசையாக பெவிலியனுக்கு அனுப்பி வைக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாஹல் 17 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், தாக்கூர் தலா 2, அக்சர், பிரசித் தலா ஒரு விக்கெட் கைபற்றினர்.
![]() |
ஒய்ட் வாஷ்
டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 119 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, ஒய்ட் வாஷ் (3-0) செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சுப்மான் கில் வென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்