வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பர்மிங்காம்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் இந்திய ஆண்கள் அணி, நைஜரை சந்தித்தது. முதலில் நடந்த இரட்டையர் போட்டியில் சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி 3-0 என போடு, ஒலாஜைடு ஜோடியை வென்றது. முதல் ஒற்றையர் போட்டியில் அஜந்தா சரத்கமல், 3-1 என காட்ரியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் சத்யன் 3-1 என ஒலாஜைடை வென்றார். முடிவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
இதில் இந்திய அணி, காமன்வெல்த்தில் இதுவரை 22 தங்கம் உட்பட 50 பதக்கம் வென்ற வலிமையான சிங்கப்பூரை எதிர்கொண்டது. முதல் போட்டியில் சத்யன், ஹர்மீத் சிங் இடம் பெற்ற ஆண்கள் இரட்டையர் அணி, 3-0 (13-11, 11-7, 11-5) என வெற்றி பெற்றது. ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அஜந்தா சரத்கமல் 1-3 (7-11, 14-12, 3-11, 9-11) என கிளாரன்சிடம் வீழ்ந்தார்.

மற்றொரு ஒற்றையரில் தமிழக வீரர் சத்யன் 3-1 (12-10, 7-11, 11-7, 11-4) என கோயங் பாங்கை வீழ்த்தினார். மூன்றாவது ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய், கிளாரன்சை சந்தித்தார். இதில் வென்றால் தங்கம் என்ற நிலையில் முதல் செட்டை ஹர்மீத் 11-8 என வசப்படுத்தினார். அடுத்த செட்டை 11-5 என வென்ற இவர், மூன்றாவது செட்டை 11-6 என கைப்பற்றினார். முடிவில் ஹர்மீத் 3-0 என வெற்றி பெற்றார்.
இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 2018, 2022 என தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது.
21
காமன்வெல்த் டேபிள்டென்னிஸ் வரலாற்றில் இந்தியா வென்ற 7வது தங்கம் இது. ஒட்டுமொத்தமாக இதுவரை இந்திய அணி 7 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கம் வென்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement