சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும்: மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நம்பிக்கை

சென்னை: சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் கூறினார்.

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், வரிசையில் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் பெறும் வகையில் க்யு ஆர் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு ரயில் நிலையத்தில் க்யு ஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறும் முறையை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், டிக்கெட் பெற வரிசையில் காத்திருக்காமல், க்யு ஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெற முடியும். மெட்ரோ ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த க்யு ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், டிக்கெட் வழங்கும் பக்கத்துக்கு செல்லலாம். அதில் பயணிகள் செல்ல வேண்டிய இடம், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்து டிக்கெட் பெறலாம்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, அடையாறு ஆற்றில் மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் சுரங்கம் அமைக்கும்போது அருகில் இருக்கும் கட்டிடங்கள் வலுவாக உள்ளதா, விரிசல் ஏற்படுமா என கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. இதில், கட்டிடங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், அதை சரி செய்யும் பொறுப்பு மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உள்ளது.

சீனாவில் இருந்து சுரங்கம் தோண்டும் இயந்திரம் வந்துள்ளது. தனித்தனி பாகங்களாக வந்துள்ள இவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டப் பணியில் சுரங்கம் அமைக்கும் பணி மிகப்பெரிய சவாலாக உள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தாம்பரம் வரை உயர்த்தப்பட்ட பாதை அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளதால், அவர்களிடம் பலகட்ட ஆலோசனை நடத்தினோம்.

இந்த ஆலோசனை நல்லபடியாக முடிந்துள்ளது. எனவே, விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.