பஹதூர்கர் (Bahadurgarh): உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 4 தொழிலாளிகள் ஹரியாணாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஹரியாணாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உரிய பாதுகாப்பு கவசம் ஏதும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை வெறும் கைகளால் சுத்தம் செய்யும் (Manual Scavenging) கூலித் தொழிலாளர்களின் இன்னுயிர் பறிபோகும் இன்னல் மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஹரியாணாவின் பஹதூர்கர் பகுதியில் உள்ள தொழிற்கூடம் ஒன்றில் அவர்கள் பணி செய்தபோது, கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயுவை சுவாசித்த காரணத்தால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களை தவிர இந்தப் பணியில் ஈடுபட்ட மேலும் 2 தொழிலாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஒரு நபர்தான் தொட்டிக்குள் சுத்தம் செய்ய இறங்கியுள்ளார். விஷவாயுவை சுவாசித்து மயங்கி அவரை மீட்கும் நோக்கில் தொட்டிக்குள் மேலும் 5 பேர் இறங்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களும் மயங்கியுள்ளனர். பின்னர் அவர்களை கிரேன் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நான்கு பேர் ஏற்கெனவே இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் கார்பன் மோனாக்சைடு மற்றும் மீத்தேன் வாயுவை சுவாசித்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு வாயுவும் ரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்துவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.