“ரஜினியை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” – வைகோ

கோவை: “ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: ”மதிமுக புத்துணர்ச்சி பெற்று தமிழகத்தின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. கோவை மதிமுகவின் கோட்டை.

அறிஞர் அண்ணா பிறந்தநாளை மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டுள்ளோம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் சிந்தனை கொண்ட கட்சிகளை வீழ்த்த திமுகவுடன் லட்சிய கொள்கைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

இந்தியாவிலே சிறப்பான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. புதிய திட்டங்கள், செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதித்து உள்ளதால், பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வரி விதிப்பினால் அதானிகளும், அம்பானிகளும் பாதிப்பு அடைவதில்லை.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வால், மற்ற எல்லா பொருட்களின் விலைவாசியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றின் விலைவாசி உயர்வால் நாளுக்கு நாள் மத்திய அரசின் மீதான வெறுப்பு வளர்ந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச அனுமதிக்கு வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சொன்னது சரி தான். இது அவருடைய அரசியல் பண்பை காட்டுகிறது. ஆளும் அரசு அதை ஏற்க வேண்டும்.

அதேபோல், 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவது வரவேற்ககூடியது.

நடிகர் ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை. அது அவருக்கும் புரிவதில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறுகிறார். ஆட்களை சேர்த்ததுக்கு பின்னர், அரசியலுக்கு வரவில்லை என்கிறார். எனவே, நடிகர் ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.