மின்கசிவு: பற்றியெரிந்த குடிசை வீடுகள்; பழங்குடிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய எம்.எல்.ஏ., ஆட்சியர்!

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ளது இளங்காடு கிராமம். இங்கு சாலையோரமாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பத்தினர் 8 குடிசை வீடுகளை அமைத்து வசித்து வந்துள்ளனர். இந்த மக்கள், நேற்றைய தினம் (08.08.2022) வயல்வெளி கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுப்புராயன் என்பவரது குடிசை வீட்டில் பிற்பகலில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அச்சமயம் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அருகிலிருந்த 7 குடிசை வீடுகளுக்கும் இந்த தீ வேகமாக பரவியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த கிராம மக்கள், விரைந்தோடி வந்து அணைக்க முயன்ற போதும், தீயை அணைக்க முடியாமல் போயுள்ளது.

எம்.எல்.ஏ லட்சுமணன் நிவாரண உதவி.

மேலும், விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் அங்கு வந்த விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அங்கிருந்த 8 குடிசைகளும் அதற்குள்ளாகவே எரிந்து சாம்பாலாகியுள்ளது.

இந்த தீ விபத்தில், 14 குடும்பத்தினரின் ஆவணங்கள், உடமைகள் என அனைத்தும் தீயில் கருகி சேதமாகிப்போனது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், நிவாரண பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இளங்காடு பகுதிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மோகன், எரிந்த வீடுகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேலும், பாதிக்கப்பட்ட 14 குடும்பத்தினரையும் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தங்கவைக்க அறிவுறுத்தியதோடு, அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார். அதன் பின், தீயில் எரிந்துப்போன குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் உள்ளிட்டவற்றை இரு தினங்களுக்குள் வருவாய்துறை வழங்கிட உத்தரவிட்டதோடு, 14 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை ஒருவார காலத்திற்குள் ஏற்பாடு செய்து வழங்கிடவும் உத்தரவிட்டார்.

சாதி சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை பெற்றுக்கொண்ட பழங்குடியினர்

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம், அந்த மக்களைச் சந்தித்து உணவு வழங்கிய விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், 14 மாணவர்களுக்கு பழங்குடி சமூக சாதிச் சான்றிதழ் வழங்கியதோடு, 8 குடும்பத்தினருக்கு குடும்ப அட்டையையும் வழங்கியுள்ளார். மேலும், வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.